ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நிலைக்க ராமாயணம் படிங்க..!| Dinamalar

தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறந்தது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்கப்படுவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு வழிபாடு இங்கு நடக்கும். கோயில் முழுவதும் மலர் அலங்காரம் செசய்யப்பட்டு, அதிகாலை மூலவருக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடக்கும். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்பசுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். அதன் பின் ஜீயர் சுவாமிகளால், ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். ஆஸ்தான பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டின் பலன் கூறுவர். கோயில்களில் ராமாயண செசாற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் ஆண்டு முழுவதும் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
இந்த நன்னாளில் ராமாயணம் குறித்த செவிவழிக்கதை ஒன்றை படித்து மகிழ்வோம். இலங்கை போரில் ராமருக்கே வெற்றி உண்டாக வேண்டும் என கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரப் பெண்கள் விரும்பினர். அதனால் கணவர், தந்தை, மகன், சகோதரர் என தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு அனுப்பினர். அவர்களின் உதவியால் ராமர் வெற்றி பெற்று சீதையை மீட்டார். ராம லட்சுமணர் தலைமையில் அனைவரும் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு திரும்பிய போது, அவர்களுடன் வந்த வானரர் தலைவன் சுக்ரீவன், கிஷ்கிந்தையில் விமானத்தை கீழிறக்கும்படி வேண்டினான்.விமானத்தைக் கண்ட வானரப் பெண்கள் ஒன்று கூடினர்.
அவர்களில் ஒருத்தி சீதையைப் பார்த்து,” நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த பெண்ணைக் காப்பாற்றத்தான் உயிரைப் பணயம் வைத்தார்களா?” எனக் கேட்டாள்.இன்னொருத்தி, “ஆம்…இந்த பேரழகியைக் காப்பாற்றவே வானரவீரர்கள் இலங்கை சென்றனர்,” என்றாள்.இவர்களது பேச்சை கவனித்த ஒரு வானரப்பெண், “அடி…போடீ! இந்த சீதை என்னவோ அழகாகத் தான் இருக்கிறாள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், நம் இனத்திற்கு இருப்பது போல் வால் இல்லாமல் போனது பெருங்குறை தான்,” என்றாள்.இதைக் கேட்டு சீதை, ராமர் உள்ளிட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். இன்று ராமாயணம் கேட்டால் ஆண்டு முழுவதும் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.