இங்கிலாந்தில் ஒமைக்ரான் வகை கொரோனாவை விட வேகமாக பரவும் புதிய வகை மாறுபட்ட வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
எக்ஸ்.இ என்றழைக்கப்படும் புதிய வகை கொரோனா, ஒமைக்ரான் வைரசின் பி.ஏ.-1 மற்றும் பி.ஏ.-2 திரிபுகளில் இருந்து உருமாற்றம் அடைந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஒரு நோயாளி கொரோனா வைரசின் பல்வேறு வகைகளால் பாதிக்கப்படும்போது இது போன்ற பிறழ்வுகள் வெளிப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய வகை கொரோனா, ஒமைக்ரானின் பி.ஏ.-2வை விட 10 சதவீதம் அதிகம் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி எக்ஸ்.இ வகை கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்டதாகவும், இதுவரை 637 பேருக்கு இந்த வகை பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும் இங்கிலாந்தின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.