’தில்லுக்கு துட்டு’,அண்ட் 2’ ராம்பாலாவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். ’தமிழ்ப்படம், அண்ட் 2’ மூலம் அகில உலக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிவா நாயகனாக நடித்திருக்கும் படம். இயக்குநர், நாயகன் இருவருமே காமெடியை மட்டுமே கதைக்களமாக தேர்ந்தெடுப்பவர்கள். இவர்கள் இருவருடன் ஆனந்த்ராஜ், ஊர்வசி, சிங்கமுத்து, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், ரவிமரியா, மயில்சாமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட காமெடி பட்டாளமே இதில் களமிறங்கியிருப்பதால் செம்ம காமெடி படமாக இருக்குமோ எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’இடியட்’?
செம்மனூர் ஜமீனுக்கு தளபதிகளாய் இருக்கும் சேதுபதியும், சேனாதிபதியும் நகைகளுக்காக சதிசெய்து ஜமீனையும் அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி பாதாள அறைக்குள் தள்ளி சாகடித்து சொத்துக்களை கைப்பற்றிக்கொள்கிறார்கள். இதனால், பழிவாங்க ஆவியாய் அலைந்துகொண்டிருக்கிறது ஜமீன் குடும்பம்.
ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி ஓடி வந்தவரைக்கூட ஊரைக்கொளுத்துவதற்காக வந்தான் என்று கட்டிபோட்டு அடிக்கும் அளவுக்கு அறியாமை கிராமமான வீரபாண்டி ஊர்த்தலைவராக ராசு (ஆனந்தராஜ்), அவரது மகன் சின்ராசு (சிவா). ஒரு மொக்கையான காரணத்துக்காக கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு செல்லும்போது விபத்துக்குள்ளாகி மனநலம் பாதிக்கப்பட்டுவிடுகிறார். இதனால், மனநல மருத்துவர் ஸ்மிதா (நிக்கி கல்ராணி) வின் மருத்துவமனையில் அட்மிட் ஆவதோடு நிக்கியை காதலிக்கவும் தொடங்கி விடுகிறார். அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள சூனியக்காரப் பெண் நீலகண்டி (அக்சரா கவுடா) நிக்கி கல்ராணியின் உயிரை எடுக்க காத்திருக்கிறார். இன்னொரு பக்கம், நிக்கி கல்ராணியை கடத்தி ப்ளாக்மெயில் செய்து, அவரது அப்பாவிடம் பணம் பறிக்கவேண்டும் என்று பல வருடங்களாக ஃபாலோ அப் பண்ணிக்கொண்டிருக்கிறது ரவிவர்மா டீம். இதில், யார் முந்தினார்கள்? பேய் பங்களாவுக்குள் சிக்கிக்கொள்ளும் நிக்கி கல்ராணிக்கு என்ன ஆனது? ஒன்சைடாக நிக்கியை காதலித்த சிவா எப்படி நிக்கியை காப்பாற்றினார்? அங்குள்ள பெண் பேய்கள் சிவாவின் குடும்பத்தால் படும் பாடு போன்றவையே மீதிக்கதை.
ஹீரோ சிவா தனது வழக்கமான காமெடிகளை வழக்கமாக செய்து அவ்வப்போது சிரிப்பூட்டுகிறார். ஆனாலும் அவருக்கு அந்த பாணிதான் செட் ஆகும் என்று அவரே நினைத்துக்கொண்டிருக்கிறார் போல. சென்னை -28 படத்தில் நடித்ததுபோல் எப்போ நடிக்கப்போறீங்க சிவா?. ஹீரோயின் நிக்கி கல்ராணி மனநல மருத்துவராக இயல்பாகவே நடித்துள்ளார். அதுவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது அவர் காட்டும் அன்பு, பரிவு, மரியாதை மனம் நெகிழவைக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக நடித்துக்கொடுத்துள்ளார்.
மதுரை முத்துவின் ஸ்டாண்டப் காமெடி போல் இருந்தாலும் படத்தில் நம்மை சிரிக்கவைப்பது ஆனந்த் ராஜ்- ஊர்வசி கூட்டணிதான். சிங்கமுத்து, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், ரவிவர்மா, மயில்சாமி காமெடிகள் பெரிதாக எடுபடவில்லை. ரெடின் கிங்ஸ்லி தனது வழக்கமான டயலாக் டெலிவரியால் கிச்சு கிச்சு மூட்டுகிறார். சிவா, ஆனந்தராஜ், ஊர்வசிக்குப்பிறகு தியேட்டரை கொஞ்சம் கல கலப்பாக்குவது ரவிமரியாதான். அதுவும், நிக்கியை கடத்திவிட்டு சிவாவிடம் பேரம் பேசும் காட்சிகளில் தியேட்டரையே சிரிப்பால் சிதறவைக்கிறார்.
இருப்பதிலேயே நகைச்சுவைப் படங்களை எடுப்பதுதான் சவாலானது. அப்படியிருக்க, ‘இடியட்’ படத்தினை முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சித்ததற்கு பாராட்டுகள். ஆனால், அதனை பேய் கதையாக சொன்னால்தான் பார்வையாளர்கள் சிரிப்பார்கள், ரசிப்பார்கள் என்பது இயக்குநருக்குள் செண்டிமெண்ட் போலும். சரி, பேய் கதையை எடுத்துவிட்டார். திரைக்கதையையாவது இன்னும் கொஞ்சம் அழுத்தமாக உருவாக்கியிருக்கலாம். பேய்க்கு நகம் வெட்டுவது, படியில் தவழ்ந்து வருவது, பேயே தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து பயந்து ஓடுவது என பல காமெடி காட்சிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்கனவே பல படங்களில் பார்த்தக் காட்சிகள்தான். குறிப்பாக, சிவாவின் தமிழ்ப்படத்தை மீண்டும் பார்த்தது போல் இருந்தது. ‘லொள்ளு சபா’ இயக்குநர் என்பதால் படத்தையும் அப்படியே எடுக்கக் கூடாதல்லவா? ’லொள்ளு சபா’ நிகழ்ச்சியை மொத்தமாக தொகுத்து ஒரு படமாக வழங்கியதுபோல் இருக்கிறது. ஆனால், லொள்ளு சபா ரேஞ்சுக்கு காமெடியாக இல்லை.
ஆரம்பம் முதல் முடிவுவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது கதையின் ப்ளஸ். குனிந்துகொண்டே போனால் மந்திரி ஆகிவிடலாம்போல போன்ற அரசியல் நையாண்டி வசனங்கள் ஓகே. ஆனால், படத்திற்கு எது ப்ளஸ்ஸாக இருக்கும் என்று இயக்குனர் நினைத்தாரோ அதுவே படத்தின் மைனஸ். பேய் பங்களா, ஜமீன் ஃப்ளாஷ் பேக் என வழக்கமான காமெடிகளையே செய்திருப்பதால் ஏற்கனவே தில்லுக்கு துட்டுகள் பார்த்தவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. அதுவும், காமெடி படமாக இருந்தாலும் அப்பா ஆனந்தராஜிடம் மகன் சிவா கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு செல்லும் காட்சிகள் மிகவும் விளையாட்டுத்தனமாக கையாளப்பட்டிருக்கிறது. நகைச்சுவை படம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சிவாவுக்கு கடைசிவரை மனநலம் குணமானதா என்பது காண்பிக்கவிடவில்லை. ஒருவேளை எப்படியிருந்தாலும் அப்படித்தான் நடிப்பார் என்பதால் இயக்குநர் அப்படியே விட்டுவிட்டார் போல. விக்ரம் செல்வாவின் இசை, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு குறைசொல்லும்படி இல்லை.
மொத்தத்தில் , படத்தில் காண்பிக்கப்படும் பேய் பங்களாவில் சிக்கி சின்னபின்னமாகி ஓடிவரும் இடியட்கள் வேறு யாருமல்ல, பார்வையாளர்களையாகிய நாம்தான்.
– வினி சர்பனா