இடியட் விமர்சனம்: ஸ்பூஃப் படத்திலும் க்ளிசேக்கள்… பேய்களும் பாவமில்லையா டைரக்டர் சார்?

தான் கிழித்த கோட்டை தாண்டிய மகனை வீட்டை விட்டுத் துரத்த நினைக்கிறார் தந்தை. சொத்தை பிரித்துத் தர வேண்டும் எனக் கேட்கிறான் மகன். பல நாள்களாகப் பூட்டி வைத்திருக்கும் பேய் வீட்டை சொத்தேன கூறி மகனுக்கு அவர் கொடுக்க, அடுத்து என்னென்ன களேபரங்கள் நடந்தது என்பதுதான் இடியட். அப்படி என்ன கோட்டை தாண்டினார் ஹீரோ எனப் படத்தில் பாருங்கள்!

தந்தை ராசு கவுண்டராக ஆனந்தராஜ். மகன் சின்ராசாக மிர்ச்சி சிவா. பெயர்களைக் கேட்டதுமே ‘சூர்யவம்சம்’ நினைவு வருகிறதா? ஆம், அதன் ஸ்பூஃப்பாகவே விரிகின்றன முதல் பாதி காட்சிகள். ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார்கள். அதன் பிறகு பேய்களை பங்கம் செய்யும் ‘தில்லுக்கு துட்டு’ பட வரிசையின் நீட்சியாகவே ‘இடியட்’டும் இருக்கிறது. பெயர்களை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள்.

இடியட் விமர்சனம்

பேய்களைக் கலாய்க்கும் சந்தானத்துக்கு பதில் பேய்களிடமே மொக்கை ஜோக் சொல்லிக் கடுப்பேற்றும் மிர்ச்சி சிவா. வழக்கமான தமிழ் சினிமா ‘லூசு பொண்ணு’ ஹீரோயின் டெம்ப்ளெட் உடைத்து ஹீரோவையே லூஸாக்கியிருக்கிறார்கள். முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதை மீட்டர் குறையாமல் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் அகில உலக சூப்பர்ஸ்டார்!

இது இல்லாமல் ஏற்கெனவே அரை டஜன் பேய் படங்களில் நடித்த ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவிமரியா என காமெடிக்கு பலரும் அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள். ஆனால், ராம்பாலாவின் முந்தைய படங்களில் ஒர்க்அவுட்டான காமெடி இந்த முறை அவருக்கு அந்த அளவு கைகூடவில்லை. ஆன்-லைன், லெக்பீஸ் என வார்த்தைகள் வைத்துச் செய்யும் காமெடிகள். அவ்வ்வ்..! ‘மதுரை முத்தண்ணே… நீங்க எங்க இங்க’ என்று நிறைய இடங்களில் கேட்கவைக்கிறார்கள்.

இடியட் விமர்சனம்

நாயகியாக நிக்கி கல்ராணிக்கும் பெரிய வேலை இல்லை. டூயட் வைக்கவில்லை என்பது ஆறுதல். கோலிவுட்டின் சமீபத்திய காமெடி ஸ்டாரான ரெடின் கிங்ஸ்லியும் இருக்கிறார். அவரது பாணியில் காமெடியில் சிரிக்க வைக்கிறார். ஆனால், எல்லா படத்திலும் இப்படியே இருந்தால் போர் அடிச்சிரும் ப்ரோ!

‘லொள்ளு சபா’ காலத்தில் இருந்து தமிழ் சினிமா க்ளிசேக்களை கலாய்த்துவருபவர் ராம்பாலா. அப்படி சினிமா பேய்களை கலாய்க்கும் படங்களாகவே அவரது ‘தில்லுக்கு துட்டு’ படங்கள் வெளிவந்தன. அவற்றில் கதை டேக் ஆஃப் ஆக லேட்டானாலும், இரண்டாம் பாதியில் மொத்த பேரையும் ஒரு பேய் வீட்டுக்குள் இறக்கி பேய்களை காமெடியன்களாக்கி காமெடி விருந்துவைத்திருப்பார்கள். பேய் க்ளிசேக்களை அடிச்சு துவம்சம் செய்யும் இந்தப் பாணியே இப்போது க்ளிசேவாக நமக்கு தெரிவதுதான் சோகம்.

பேய் வீட்டுக்கு ஒரு பிளாஷ்பேக், ஹீரோவுக்கு ஒரு கதை, இரண்டாம் பாதியில் மொத்த பேரையும் ஒரு பேய் வீட்டில் உலாவவிடுவது என முந்தைய படங்களின் டெம்ப்ளேட்டிலேயே பயணிக்கிறது படம். இதிலிருந்து வெளியில் வந்து வேறு எதையாவது ஸ்பூஃப் செய்து கலாய்க்கலாமே டைரக்டர் சார்!

இடியட் விமர்சனம்

இன்னும் எத்தனை நாள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கேலி பொருள்களாகவே தமிழ் சினிமாவில் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. படத்திற்கே ‘இடியட்’ எனப் பெயர் வைத்துவிட்டோம். எதுவேண்டுமானாலும் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டார்கள் போல. கதாபாத்திரங்கள் எப்போது என்ன பேசுவார்கள், செய்வார்கள் என்று யூகிக்கவே முடியவில்லை. காட்சிகளும் காமெடிகளுமே அப்படிதான் இருக்கின்றன. மேக்கப், பின்னணி இசை, பாடல்கள் உட்பட டெக்னிக்கலாகவும் ‘ஜஸ்ட் பாஸ்’ வாங்கும் படமாகவே இருக்கிறது இடியட்!

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறதாம்… ஹாரர் காமெடி ஜானரிலிருந்து தமிழ் சினிமா எப்போது விடுதலை பெறுமோ?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.