பைக்கிலோ காரிலோ போகும்போது, யாராவது இடிக்க வந்தால்… டிராஃபிக்கில் கடுப்பேற்றினால்… ‘வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா’ என்று 80–கள் ஸ்டைலில் இனி தகாத வார்த்தையெல்லாம் போட்டுத் திட்ட முடியாது. காரணம், அட்டானமஸ் டிரைவிங். காலேஜ்களில் அட்டானமஸ் கேள்விப்பட்டிருப்போம்; கார்களில் இந்த அட்டானமஸ் டிரைவிங் என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். அட்டானமஸ் டிரைவிங் என்றால், கார்கள் மனிதர்களை நம்பாமல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி இயங்குவது.
உதாரணத்துக்கு, ஒரு ஹைவேஸில் ட்ரிப்பிள் டிஜிட்டில் பறக்கிறீர்கள்; திடீரென மனிதர்களோ, விலங்குகளோ குறுக்கே வரும் பட்சத்தில் தானாகவே பிரேக் அடித்து நம்மைக் காப்பது… தானாகவே லேன் மாறுவது போன்றவைதான் இந்த அட்டானமஸ் பிரேக்கிங் மற்றும் டிரைவிங் லெவல்கள். இவற்றை ADAS (Advanced Driver Assistance System) என்கிறார்கள் ஆட்டோமொபைலில். இவற்றில் பல லெவல்கள் உண்டு. நம் ஊரில் இந்த ADAS லெவல் 1 தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 700, ஹூண்டாய் அல்கஸார் போன்ற கார்கள் மார்க்கெட்டில் கெத்தாகக் கிடைக்கின்றன. இதில் எம்ஜி நிறுவனம், லெவல் 2 ADAS தொழில்நுட்பத்துடன் கலக்கலாக வந்திருக்கிறது.
அதென்ன லெவல் 1, லெவல் 2 – அட்டானமஸ் டிரைவிங்கில் மொத்தம் 5 லெவல்கள் உண்டு. அது என்னனு பார்க்கலாம்.
லெவல் ஜீரோ : ஒரு காரின் பிரேக், ஆக்ஸிலரேட்டர், கிளட்ச் என எல்லா பெடல்களின் பொறுப்பையும் உங்கள் கால்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். ஸ்டீயரிங்கும் கியரும் கைகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கும். நடுவில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், நீங்கள் மட்டுமே பொறுப்பு.
லெவல் 1: ஸ்டீயரிங் அல்லது ஆக்ஸிலரேஷன் அல்லது பிரேக்கிங் – இந்த மூன்றில் ஏதாவது இரண்டை மட்டும் நீங்கள் கவனித்துக் கொண்டால் போதும். உதாரணத்துக்கு, ஸ்டீயரிங்கும் ஆக்ஸிலரேஷனும் மட்டும் உங்கள் கன்ட்ரோல் என்று வைத்துக் கொள்வோம்; ஆபத்து காலங்களில் கார் தானாக பிரேக் பிடித்து நிற்கும். இது லெவல் 1.
லெவல் 2: இதில் உங்கள் கார் ஒன்றுக்கும் மேற்பட்ட சில பொறுப்புகளைக் கவனித்துக் கொள்ளும். உதாரணத்துக்கு – பார்க்கிங், ஸ்டார்ட்/ஸ்டாப் டிராஃபிக்கில் காரை நேவிகேட் செய்வது, சட்டென லேன் மாறுவது இது போன்ற விஷயங்களில் உங்கள் கார் அலெர்ட்டாக இருக்கும். லெவல் 1 மற்றும் லெவல் 2 – இரண்டையும் சேர்த்துத்தான் ADAS (Advance Driver Assist System) தொழில்நுட்பம் என்கிறார்கள். இருந்தாலும், நீங்கள் காரை மானிட்டர் செய்து கொண்டே இருப்பது அவசியம். தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் பட்சத்தில், எந்த நேரத்திலும் நீங்கள் அலெர்ட்டாக இருக்க வேண்டும்.
லெவல் 3: இதை கண்டிஷனல் ஆட்டோமேஷன் என்கிறார்கள். இது கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம். முந்தைய லெவல்கள் காரின் அசிஸ்ட்டன்ஸுக்கு அசிஸ்ட்டன்ட்டாக இருந்தால், இது கார் ஓட்டுவதையே கவனித்துக் கொள்ளும். அதுவும் ஹைவேக்களில் இது ஜாலியாகவே இருக்கும். நீண்ட சாலைகளில் எவ்வளவு நேரம்தான் ஆக்ஸிலரேட்டரை கிராஜுவலாக மிதித்து, கவனமாக ஸ்டீயரிங் பிடித்து… என்று போர் அடிக்கும் டிரைவர்களுக்கு இது வரப்பிரசாதம். சாலை மராமத்துப் பணிகள், ரோடு டைவர்ஷன் வந்தால் டிரைவருக்கு அலெர்ட் கொடுத்துவிடும். அப்புறமென்ன, உங்கள் சோம்பேறித்தனத்துக்கு விடுதலை கொடுக்க வேண்டும்.
லெவல் 4: இதை High Automation என்கிறார்கள். முன்னது ஹைவேஸில்தான் ராஜா என்றால், இது சிட்டிக்குள்ளும் உங்கள் உதவியில்லாமல் புகுந்து புறப்படும். டிரைவர்கள் உங்கள் சொந்த வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம்; டிவி பார்க்கலாம்; குழந்தைகளுடன் பிசியாக இருக்கலாம். அட, ஒரு குட்டித் தூக்கம்கூடப் போடலாம். ரொம்பவும் இக்கட்டான நேரங்களில் உங்களை அலெர்ட் செய்யும். அப்படியும் நீங்கள் தூக்கத்தில் இருந்தால்… கார் தானாகவே பிரேக் பிடித்து நின்றுவிடும்.
லெவல் 5: இதுதான் Full Automation என்கிறார்கள். ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தின் உச்சம் இது. இதில் டிரைவர், பயணியாக தேமேவென அமர்ந்து வந்தால் போதும். அட, கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. லைசென்ஸ் தேவையில்லையானுலாம் கேட்கப்புடாது. ரோபோ டாக்ஸிக்கள் இந்த லெவல் 5 தொழில்நுட்பத்தில்தான் ரெடியாக இருக்கின்றனவாம். சில லெவல் 5 கார்களில் ஸ்டீயரிங் வீல், பெடல்கள் போன்ற விஷயமே இருக்காதாம்!
ஆச்சரியமாக இருக்கிறதுதானே! இந்த லெவல்களில் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் உற்சாகமாகக் களமிறங்கி இருக்கின்றன. லெவல் 3 ஆட்டோ பைலட் சிஸ்டத்துடன் தனது கார்களைக் கொண்டு வரப் போகும் பென்ஸை ஆட்டோமொபைல் உலகம் ஆச்சரியமாக உற்றுநோக்கும் அதே வேளையில், இதில் பென்ஸுக்கு ஒரு சிக்கலும் வந்திருக்கிறது. நம் ஊரில் இல்லை; அமெரிக்கா போன்ற நாடுகளில்!
ஆம், லெவல் 3–ல் நாம் ஏற்கெனவே சொன்னபடி, கார்களில் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்படும் பட்சத்தில், டிரைவர்கள்தான் அதற்கு முழுப் பொறுப்பு. ஆனால், லெவல் 3 ஆட்டோ பைலட் உடன் வரும் கார்கள் விபத்தாகும் பட்சத்தில், பென்ஸ்தான் அதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள் நிபுணர்கள்.
2019–ல் அமெரிக்காவில் லெவல் 2+ ஆட்டோ பைலட் கொண்ட டெஸ்லா மாடல் S கார் ஒன்று விபத்தானதில், மற்றொரு ஹோண்டா காரில் இருந்த இரண்டு பேர் பலியாயினர். இதில் சிவப்பு விளக்கு எரிந்தபோதும், அந்த டெஸ்லா கார் வேகமாகப் போனதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, இது தொழில்நுட்பக் கோளாறு; இந்த நேரத்தில் டிரைவருக்கு அலெர்ட் கொடுத்திருக்க வேண்டும்; டிரைவராவது அதைக் கையில் எடுத்திருக்க வேண்டும். இதில் டெஸ்லா மீதுதான் முழுத்தவறு; முறையாக டெஸ்லா அரசாங்கத்திடம் அனுமதி பெறவில்லை என்றும்… இதில் டிரைவர் மீதுதான் தவறு. அவர் ஆட்டோ பைலட் சிஸ்டத்தை மிஸ்யூஸ் செய்திருக்கிறார் என்றும் வழக்கு வாக்குவாதம் போய்க் கொண்டிருக்கிறது.
இதில் லெலவ் 3 என்று ஏற ஏற, பொதுமக்களுக்குத்தான் ஆபத்து என்றும் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.
‘‘இந்த ஆண்டு இறுதிக்குள் கலிஃபோர்னியா, நெவடா போன்ற மாகாணங்களில் லெவல் 3 ஆட்டோ பைலட் கொண்ட கார்களைக் களமிறக்கிய நிறுவனங்களில் பென்ஸ்தான் முதலிடமாக இருக்கப் போகிறது!’’ என்கிறார், பென்ஸின் Drive Pilot Senior Development Manager கிரெகார் குகெல்மென் என்பவர்.
இதைத்தான் அமெரிக்க அரசு பயத்துடன் எதிர்நோக்குகிறது. லெவல் 2–வுக்கே இரண்டு உயிர்கள் பலியாகி இருக்கின்றன என்றால்… லெவல் 3க்கு? இதுதான் போக்குவரத்து அமைச்சகத்தின் பயம்.
அதற்கும் மெர்சிடீஸ் பதில் வைத்திருக்கிறது. ‘‘இந்த லெவல் 3 ஆட்டோ பைலட் 40 கிமீ–க்குள்தான் வேலை செய்யும்; (ஜெர்மனியில் 60 கிமீ)… பென்ஸின் மேப் வழிகாட்டும் நெடுஞ்சாலைகளில் மட்டும்தான் இயங்கும். மிக முக்கியமான நேரங்களில் இது டிரைவருக்கு 10 விநாடிகள் நேரம் கொடுக்கும்; டிரைவரைத் தூங்க விடாது!’’ என்று சில விஷயங்கள் சொல்கிறது பென்ஸ். ஆனால், ஜெர்மனி போன்ற நாடுகளில், ஸ்மார்ட்போனை நோண்டிக் கொண்டே டிரைவர் சீட்டில் அமர்ந்து ஜாலியாக பென்ஸை ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
இதைத் தாண்டி, ‘‘விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் பென்ஸ் நிறுவனமே இதற்கு முழுப்பொறுப்பு ஏற்றுக் கொள்ளும்!’’ என்று அமெரிக்க அரசிடம் கையெடுத்துக் கும்பிடுகிறது பென்ஸ்.
இனிமேல் கார் எதிலாவது இடித்தால்… ‘பென்ஸ்கிட்ட சொல்லிட்டு வந்திட்டியா’ என்று வேண்டுமானால் திட்டலாம்.