பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையென்றால் அவருடைய ஆட்சி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இம்ரான் கான், “என்னைச் சுற்றி இப்போது நடக்கும் அரசியலுக்குப் பின்னால் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இருக்கிறார்” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள உயர்மட்ட அமெரிக்கத் தூதரக அதிகாரியை வரவழைத்து, நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் `தலையிடல்’ குறித்து கடுமையான எதிர்ப்பை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து நேற்று அவர் அளித்த பேட்டியில், “பிப்ரவரி மாதம் ரஷ்யாவுக்குச் சென்று வந்ததால் சக்திவாய்ந்த நாடு என் மீது கோபமடைந்துள்ளது. இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை அதன் மக்களை மையமாகக் கொண்டுள்ளது” என்றார்.
ஆனால், இம்ரான் கானின் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.