வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை, அரசின் முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்துஉள்ளார்.
கடந்த மாதம், ஜோ பைடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ஜாவை, கொரோனா தடுப்பு ஆலோசகராக நியமித்தார். அத்துடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, புனீத் தல்வார், ஷெபாலி ரஸ்தான் துகால் ஆகியோரை முறையே மொராக்கோ, நெதர்லாந்து துாதர்களாக அறிவித்தார். இந்நிலையில், ஜோ பைடன் மேலும் இரு இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்.
சட்ட வல்லுனரும், சமூக உரிமை ஆர்வலருமான கல்பனா கோடகல், சமத்துவ வேலைவாய்ப்பு ஆணையத்தின் ஆணையர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு, தொழிலாளர் நலன் உள்ளிட்ட சமூக உரிமைகளுக்காக கல்பனா கோடகல் பல வருடங்களாக போராடி வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணக்கு தணிக்கையாளரான வினய் சிங், வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் தலைமை நிதி அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே ஒபாமா அரசில் துணை உதவி செயலராக பதவி வகித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கும், முதலீட்டு கொள்கைகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
Advertisement