கீவ்: உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்கள் மீது இன்று ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
கீவ் உள்ளிட்ட நகரங்களில், படை குறைப்பு செய்யப்படும் என்று ரஷ்யா இந்த வாரம் அறிவித்தது. இந்த நிலையில் தொடர்ந்து தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் புகார் தெரிவித்த நிலையில், இன்று (சனிக்கிழமை) உக்ரைனின் இரு முக்கிய நகரங்கள் (போல்டாவா, கிரெமென்சுக்) மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் வாழ்வழித் தாக்குதலினால் பல கட்டிங்கள் சரிந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கீவ் நகரில் உக்ரைன் படைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய எல்லைக்குள் இருக்கும் எண்ணெய்க் கிடங்கின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி உக்ரைன் படைகள் அழித்தன. ஆனால் இது குறித்து உக்ரைன் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் போர் காரணமாக ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்ய போரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.