இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரகடனப்படுத்தியுள்ளார்.
கொரோனாவால் சுற்றுலாத்துறை முடக்கம், அந்நியச் செலாவணி வீழ்ச்சி, பண வீக்கம், அத்தியாவசிய பொருட்கள் இமாலய விலையேற்றம், பெட்ரோல்- டீசல், எரிவாயு விண்ணை முட்டும் அளவுக்கு விலையேற்றம், மின் தடை, கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் நாடே கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது.
அதிபர் கோத்தபயவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய மக்கள் மிரிஹானவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். போலீசாருக்கும், பொது மக்களுக்கு இடையே நடந்த கலவரத்தில் போலீசார், பொது மக்கள் என 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பொதுச் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் நாடு தழுவிய அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். மேலும் ஆட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரணையின்றி கைது செய்ய ராணுவத்திற்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்புவின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கை போலீசார் அமல்படுத்தியுள்ளனர்.