இலங்கையில் டீசல் முற்றிலும் இல்லாத நிலையில் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் டன் டீசல் அந்நாட்டை சென்றடைந்துள்ளது. இதையடுத்து அங்கு டீசல் பிரச்னை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில், டீசல் முற்றிலும் இல்லாததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளை காணமுடிகிறது. மூன்று முதல் நான்கு நாட்கள் வரை பேருந்துகளும், ஆட்டோக்களுமாக பெட்ரோல் பங்க்குகள் முன் காத்திருக்கின்றன. வாகன ஓட்டுநர்களும் வேறு வழியின்றி வாகனங்களிலேயே காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 40 ஆயிரம் டன் டீசல், இலங்கை சென்றடைந்துள்ளது.
டீசல் இல்லாததால் இலங்கையில் உள்ள மின்நிலையங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளன. இதனால் பெரும்பாலும் 10 மணிநேரமும், சில இடங்களில் 13 மணிநேரமும் மின்வெட்டு நிலவுகிறது. தற்போது இந்தியாவில் இருந்து டீசல் சென்றுள்ளதால், இலங்கை மின் நிலையங்களுக்கு 6 ஆயிரம் டன் டீசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதனால் இலங்கையில் மின் உற்பத்தி சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் இரவு முதல் காத்திருந்து சிலிண்டரை வாங்க டோக்கன் பெற்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்யாவசியப்பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால், மக்கள் போதிய உணவின்றி அவதிப்படும் நிலை உள்ளது. இந்தியாவில் இருந்து நாற்பதாயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்படுவதால் இலங்கை மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM