அபுதாபி:
இஸ்லாமிய நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆங்கில நாள்காட்டிக்கும், இஸ்லாமிய நாள்காட்டிக்கும் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ரமலான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாள்காட்டியில் 11 நாட்கள் குறைந்து தொடங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ரமலான் மாதம் தொடங்கியது.
இந்நிலையில், இஸ்லாமிய புனித மாதமான ரமலான் இஸ்லாமிய நாடுகளில் இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனித மாதத்தில் 29 அல்லது 30 நாட்கள் தொடர்ந்து நோன்பு வைக்கப்படுகிறது. இதில் நேற்று முதல் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை தினமும் இரவு நேர இஷா தொழுகைக்கு பின் அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறுகிறது.
இன்று தொடங்கியுள்ள நோன்பு ரமலான் மாதம் நிறைவுற்று ஷவ்வால் மாதம் முதல் நாள் ரம்ஜான் பண்டிகை வரும் வரை தொடரப்படுகிறது. இதில் வருகிற மே 2 அல்லது 3-ந் தேதி (பிறை தெரியும் அடிப்படையில்) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டில் நேற்று மாலை பிறை தென்படவில்லை. எனவே ஓமன் நாட்டில் நாளை ரமலான் மாதம் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.