சென்னை: உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் மருத்துவக் கல்வியைத் தொடரலாம் என்று அந்நாட்டின் முதலீட்டு ஆணையர் மோனிகா கென்னடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயிலுவதற்கான வசதி வாய்ப்புகளை விளக்கும் விதமாக அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் மோனிகா கென்னடி, சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
விசா 4 ஆண்டு நீட்டிக்கப்படும்
ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டில் 97 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்வி பயில வரும் மாணவர்களுக்கு, படிப்பை முடித்த பின்னர் பணி நிமித்தமாக 2 முதல் 4 ஆண்டுகள் வரை விசா நீட்டிக்கப்படும். கல்விநிறுவனங்கள், அரசின் பல்வேறுஉதவித் தொகை திட்டங்கள்மூலமாக ஆஸ்திரேலியாவில் கல்விச் செலவு 75 சதவீதத்துக்குமேல் குறைக்கப்படுகிறது.
அதேபோல, பகுதி நேர பணியில் இருந்துகொண்டே படிக்கும் மாணவர்களுக்கு, கரோனா ஊரடங்கின்போது அரசு நிதியுதவி செய்தது. இதுபோன்ற வசதிகள் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. மேலாண்மை, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளையே இந்திய மாணவர்கள் விரும்புகின்றனர். கனிம வளங்கள் தொடர்பான படிப்புகள் ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளன. தொழில்துறை சார்ந்த படிப்புகளை பொறுத்தவரை பிற நாடுகளுடன் ஓப்பிடும்போது ஆஸ்திரேலியாவில் மிக அதிகம்.
உயர்கல்வி பயில வரும் மாணவர்களுக்கு விசா தொடர்பான சிக்கல்கள் உடனுக்குடன் சரிசெய்யப்படும். எங்கள் நாட்டில் கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கிராமப்புறத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை https://www.studyaustralia.gov.au/ என்ற அரசின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
செலவை குறைக்க அரசு உதவி
தற்போது போரினால் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் தங்கள் மருத்துவக் கல்வியை தொடர முன்வரலாம். ஆனால், கல்வியின் தரம் காரணமாக உக்ரைனைவிட கூடுதல் செலவாகும். இருப்பினும், உதவித் தொகை திட்டங்களை பயன்படுத்தி, செலவைக் குறைக்க அரசே உதவி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பிரதிநிதிகள், தனியார் கல்வி ஆலோசனை மையங்களின் நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.