கீவ்:“ரஷ்ய படையினர் உக்ரைனின் கீவ் நகரை விட்டு வெளியேறும்போது கண்ணி வெடிகளைவிட்டுச் செல்கின்றனர். இதனால் மீண்டும் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தோன்றுகிறது” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதில் தலைநகர் கீவில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.
இதையடுத்து கீவ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை விட்டு ரஷ்ய படையினர் விலகத் துவங்கி உள்ளனர். அந்தப் பகுதிகளை உக்ரைன் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ரஷ்ய படையினர் கண்ணிவெடிகளை பதித்து ராணுவ ஆயுதங்களை விட்டுச் செல்வதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ரஷ்ய படையின் இந்த நடவடிக்கை உக்ரைன் அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று கூறியதாவது:கீவ் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தினர் வெளியேறும்போது கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை விட்டுச் செல்கின்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வரும் நாட்களில் ரஷ்ய படையினர் முழு திறனுடன் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமடையக்கூடும். எனவே ரஷ்ய ராணுவத்தினர் விலகிச் சென்ற பகுதிகளில் இப்போதைக்கு இயல்பு நிலை திரும்புவது சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்களில் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Advertisement