உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய துருப்புகள் கண்ணிவெடிகளை புதைத்துவிட்டு கொடுமைகளை செய்து சென்றுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனால், கீவ் நகரம் பாதுகாப்பற்றதாக, பொதுமக்களுக்கு வாழ்க்கை நாளும் துயரமாக அமையவிருக்கிறது என்றார் அவர்.
மட்டுமின்றி, கைவிடப்பட்ட ஆயுதங்கள், கொன்று தள்ளிய அப்பாவி மக்களின் சடலங்கள் என கீவ் நகரம் சுடுகாடு போன்று காட்சியளிப்பதாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ரஷ்யா தனது படைகளை கீவ்வில் இருந்து விலக்கிக் கொண்டாலும் கிழக்கு உக்ரைனில் துருப்புப் பலத்தை அதிகரித்து வருவதாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும், உக்ரேனிய துருப்புகள் ரஷ்யர்களை வெளியேற்றிய பின்னர் அல்லது அவர்களைப் பின்வாங்க வைத்த பின்னர் தலைநகருக்கு அருகிலுள்ள பல பகுதிகளை மீட்டெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, ரஷ்ய துருப்புகள் நிர்பந்தம் காரணமாக பின்வாங்கிய நகரங்கள் தூரத்திலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களையும் ராக்கெட் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் என்றும் கிழக்கில் போர் தீவிரமாக இருக்கும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளர்.
மக்கள் குடியிருக்கும் வகையில் தற்போது நகரங்கள் இல்லை எனவும், கண்ணிவெடிகளை மொத்தமாக நீக்கபட வேண்டும் எனவும், உறுதி அளிக்கப்படும் வரையில் மக்கள் திரும்ப வேண்டாம் எனவும் ஜெலென்ஸ்கி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போருக்குப் பிறகு நாம் மீட்டெடுத்துள்ள பிரதேசங்களில் கூட, பழையபடி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது இன்னும் சாத்தியமில்லை என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது நாட்டு மக்களுக்கு காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளர்.
ஒரு மாதத்திற்கு முன்பு ரஷ்யப் படைகளால் முர்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரம், அங்குள்ள மகப்பேறு மருத்துவமனை மற்றும் பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நாடக அரங்கம் உள்ளிட்டவை போரின் மோசமான வடுவாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.