புச்சா,
உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் தொடங்கிய நிலையில் பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டதோடு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷியா ஒரு புறம் கூறினாலும் மற்றொருபுறம் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இது வரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.
இந்நிலையில் கீவ் அருகே ஒரேதெருவில் 20 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷிய ராணுவத்திடம் இருந்து, கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றிய பிறகு, அங்கு ஒரே தெருவில் குறைந்தது 20 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்று ஏ.எஃப்.பி (AFP) பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதில் ஒருவரின் உடலில் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும், தலைநகரின் வடமேற்கே புறநகர் நகரத்தில் குடியிருப்புப் பாதையில் பல நூறு மீட்டர்கள்அளவுக்கு அந்த சடலங்கள் சிதறி கிடந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.