வாடிகன்:
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு தொடர்பாக புதினை இதுவரை விமர்சிக்காத போப் பிரான்சிஸ், முதல் முறையாக இன்று மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒரு வல்லமை வாய்ந்தவர் தேசியவாத நலன்களுக்காக மோதல்களைத் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய தரைக்கடல் தீவு நாடான மால்டாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளிடையே பேசுகையில் இவ்வாறு கூறி உள்ளார்.
“ஐரோப்பாவின் கிழக்கிலிருந்து, சூரிய உதயமாகும் நிலத்திலிருந்து, போர் மேகங்கள் இப்போது பரவியுள்ளன. மற்ற நாடுகளின் படையெடுப்புகள், காட்டுமிராண்டித்தனமான தெரு சண்டைகள் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் ஆகியவை கடந்த காலத்தின் கொடூரமான நினைவுகள் என்று நினைத்திருந்தோம். எனினும், மரணம், அழிவு மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்டு வரும் போர்க் காற்று, மக்களின் வாழ்க்கையின் மீது வலுவாக தாக்கி, நம் அனைவரையும் பாதித்துள்ளது” என்றார் போப் பிரான்சிஸ்.
பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட நடவடிக்கையானது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றும், உக்ரைன் பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக அல்ல என்றும் ரஷியா கூறுகிறது. ராணுவத்தை முடக்கி, நாஜிக்கள் பிடியில் இருந்து உக்ரைனை விடுவிக்கவும் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால், போப் பிரான்சிஸ் ஏற்கனவே அந்த கருத்துக்களை நிராகரித்து, ரஷியாவின் தாக்குதலை ‘போர்’ என்று அழைத்தார்.