உட்கட்சி தகராறு; டூவிலர் ஷோ ரூமுக்குள் புகுந்து அடித்து நொறுக்கிய திமுக-வினர்! – என்ன நடந்தது?

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி கவுன்சிலர் அம்மாபிள்ளை மகன் பாலாஜி. இவர் அதேபகுதியில் டூவிலர் ஷோ ரூம் வைத்து வாகனங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஷோரூமிற்கு வந்த சிலர் அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதம், தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த டூவிலர்களை கீழே தள்ளிவிட்டு அடித்து நொருக்கினர். மேலும் அங்கிருந்த ஷோரூம் ஊழியரையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.

சின்னமனூர் நகராட்சி

இது குறித்து டூவிலர் ஷோரூம் உரிமையாளர் பாலாஜியிடம் விசாரித்தோம். “நாங்கள் தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் தாயார் அம்மாபிள்ளை சின்னமனூர் நகராட்சி உறுப்பினராக உள்ளார். நகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்வு நடைபெற்றது. தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் அய்யம்மாள் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, சி.பி.ஐ, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.‌

கடைக்குள் புகுந்து தகராறில் ஈடுபடும் திமுகவினர்

தேர்வில் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் அதற்கு என் தாயார், குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொள்ளலாம் என ஆலோசனை வழங்கினார். மேலும் அவரது கருத்தை மற்ற உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். இதனால் நகராட்சித் தலைவர் தரப்பினர், `தலைவருக்கே ஆலோசனைக் கூறுகிறாயா, நாங்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்று செல்லுங்கள்’ என்று கோபத்தை வெளிபடுத்தியுள்ளனர். ஆனால் என் தாயாரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த நகராட்சித் தலைவர் மகன் ஆதரவாளர்கள் எனது கடையை அடித்து நொருக்கியுள்ளனர். இதன்காரணமாக அடுத்தடுத்து நடத்தப்படும் கூட்டங்களுக்கு பல கவுன்சிலர்கள் அச்சம் காரணமாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

சின்னமனூர் காவல்நிலையம்

நகராட்சித் தலைவர் அய்யம்மாளின் மகன் முத்துக்குமரன் என்பவர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வில், `உன் அம்மா எப்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம்’ எனக் கூறி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரின் ஆதரவாளர்களான திலீபன், சிவா, கிஷோர், பிரகாஷ் ஆகியோர் வந்து என் ஷோ ரூமில் ஊழியர்களுடன் தகராறு செய்து வாகனங்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 உயர்ந்த ரக இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தகராறு

இதுகுறித்து சின்னமனூர் நகராட்சித் தலைவர் அய்யம்மாளின் மகன் முத்துக்குமரன் உட்பட தனது ஷோரூமில் புகுந்து வாகனங்களை சேதப்படுத்திய 5 பேர் மீது சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிலவி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றசாம்சாட்டி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.