எனது உயிருக்கு ஆபத்து – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இஸ்லாமாத்:
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள இம்ரான்கான் தன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார். மேலும் தன்னை பதவியில் இருந்து அகற்ற வெளிநாட்டு சதி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதற்கு என்னிடம் நம்பகமான தகவல்கள் இருக்கிறது. ஆனால் அதற்கு பயந்து பதவியை விட்டு விலகப் போவதில்லை. சுதந்திரமான மற்றும் ஜனநாயக பாகிஸ்தானுக்காக எனது போராட்டத்தைத் தொடருவேன்.
சக்திவாய்ந்த ராணுவம் எனக்கு 3 விருப்பங்களை வழங்கியது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, முன்கூட்டியே தேர்தல் அல்லது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தல் ஆகிய மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய கூறியது.
எனது உயிருக்கு ஆபத்து இருப்பது மட்டுமின்றி, அந்நியர்களின் கைகளில் எதிர்க்கட்சிகள் உள்ளதால் எனது நற்பெயரை கெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் எனது அரசு தப்பி பிழைத்தால் நிச்சயமாக எங்களுடன் எதிர்க்கட்சிகள் பணியாற்ற முடியாது. முன்கூட்டியே தேர்தல் தான் சிறந்த வழி. என் தேசத்தை எனக்கு தனிப்பெரும்பான்மை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். நான் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.