புதுடெல்லி: ஒமிக்ரான் வைரசை விட 10 மடங்கு வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டு இருப்பது பீதியை கிளப்பியுள்ளது.தென் கொரியா, சீனாவை தவிர, உலகத்தின் மற்ற நாடுகள் அனைத்திலும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த 1ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால், பல மாநிலங்களில் முகக்கவசம் அணிவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தற்போது, தென் கொரியா, சீனாவில் மட்டுமே ஒமிக்ரானின் உருமாற்ற வைரசான பிஏ-1, பிஏ-2.வால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தென் கொரியாவில் தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் உள்ளது.இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமிக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவக் கூடிய புதிய உருமாற்ற வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது, உலகளவில் பீதியை கிளப்பியுள்ளது. ‘எக்ஸ்இ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், ஒமிக்ரானில் இருந்து உருவான பிஏ-1, பிஏ-2வால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ளது. இந்நாட்டில் கடந்த மாதம் 19ம் தேதி முதன் முதலில் இது கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரையில் சுமார் 700 பேர் இந்த வைரசால் பாதித்துள்ளனர். மற்ற நாடுகளில் இது காணப்படவில்லை. இந்த புதிய வைரசால் உலகளவில் மீண்டும் புதிய அலை உருவாகுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு எடுத்து வருகிறது.நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:* கடந்த 24 மணி நேரத்தில் 1,260 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்துக்கு 27 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.* கேரளாவில் 79 பேர் உட்பட ஒரே நாளில் 83 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பலி உலக அளவில் இந்தியா முதலிடம்?கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இதுவரை 4.30 கோடிக்கும் அதிகமானோர் பாதிகப்பட்டுள்ளனர். 5,21,264 பேர் இறந்து உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் குறிப்பாக டெல்டா வகை பரவலின்போது இந்தியாவில் பல இறப்புகள் கணக்கிடப்படாமல் போய்விட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இதன் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் தற்போது புதிய அறிக்கையை உருவாக்கி வருகிறது. இதன் மூலம், இந்தியாவில் தற்போதுள்ள பலி எண்ணிக்கையை விட 4 மடங்கு அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது, அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. பிரேசிலில் 6.6 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவின் பலி எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டால், உலகளவில் அதிக பலிகள் ஏற்பட்ட நாடாக இந்தியா மாறும். இதனால், உலகளவிலான பலி எண்ணிக்கையும் 60 லட்சத்தை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.