ஒமைக்ரான் வகைகளால் உருவான புதிய வைரஸ்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை| Dinamalar

புதுடில்லி:’ஒமைக்ரான்’ வைரசின் துணை பிரிவுகளான, ‘பி.ஏ., 1 மற்றும் பி.ஏ., 2’ வைரஸ்கள் இணைந்து, எக்ஸ்.இ., என்ற புதிய வகை கொரோனா வைரசை உருவாக்கி உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பி.ஏ., 1 மற்றும் பி.ஏ., 2உலகம் முழுதும், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்பு களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், மரபணு மாறிய புதிய வகை வைரஸ்கள், அச்சுறுத்தலாகவே உள்ளன.இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ், பரவத் துவங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:ஒருவர், இரண்டு வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், அவை, புதிய வகை வைரஸ் உருவாக வழிவகுக்கின்றன.இதன்படி, ஒமைக்ரான் வைரசின் பிரிவுகளான பி.ஏ., 1 மற்றும் பி.ஏ., 2 வகை வைரஸ்கள் சேர்ந்து, எக்ஸ்.இ., என்ற மரபணு மாறிய புதிய வகை வைரசை உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிப்பு

இந்த வகை வைரசால், பிரிட்டனில் ஜனவரி 19ம் தேதி, முதல் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது:தற்போது வரை, எக்ஸ்.டி., எக்ஸ்.இ., மற்றும் எக்ஸ்.எப்., என்ற மூன்று புதிய வகை வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், டெல்டா மற்றும் பி.ஏ., 1 வகைகள் இணைந்து, எக்ஸ்.டி., மற்றும் எக்ஸ்.எப்., வகை வைரஸ்களை உருவாக்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

‘பூஸ்டர் டோஸ்’ அவசியம்!

நாட்டில், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், என்.ஐ.வி., எனப்படும், வைரஸ் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரக்யா யாதவ் கூறியதாவது:

கொரோனா தடுப்பூசி குறித்து, கடந்த ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், முதல் ‘டோசு’க்கு, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும்; இரண்டாவது டோசுக்கு, ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் செலுத்திக்கொண்டோருக்கு, அதிக செயல்திறன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், டெல்டா உள்ளிட்ட சில வகை கொரோனா வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும். ஒமைக்ரான் வகை வைரசில் இருந்து பாதுகாப்பாக இருக்க, ‘பூஸ்டர்’ டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.