கச்சா எண்ணெய் தள்ளுபடியில் கிடைப்பதால் ரஷியாவிடம் ஏன் வாங்கக்கூடாது? – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவின் கச்சா எண்ணெயை வாங்க மறுத்தன.
இதையடுத்து, மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது. போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் முதன்மையான உயர் தரத்திலான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்கிறது.
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து ஏற்கனவே குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கிவிட்டோம். எங்கள் நாட்டின் நலனுக்கே நாங்கள் முதலிடம் அளிப்போம் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளோம். இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் மனதில் வைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.
நாங்கள் எங்கள் நாட்டின் நலனுக்கு தான் முதலிடம் கொடுப்போம். கச்சா எண்ணெய் விஷயத்தில் இந்தியாவின் தேவைக்கே முதலிடம் கொடுப்போம். கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைக்கும்போது, தள்ளுபடியில் இருந்தால் நாம் ஏன் அதை வாங்கக் கூடாது. எங்கள் மக்களுக்கான தேவை இது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.