புதுடெல்லி: லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் நீதிபதிகளுக்கு எதிராக 1,631 புகார்கள் வந்துள்ளன என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவை யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ரிஜிஜு நேற்று முன்தினம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2017-ம்ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 டிசம்பர் மாதம் வரை லஞ்ச விவகாரம் தொடர்பாக நீதிபதிகளுக்கு எதிராக 1,631 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அந்தந்த உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவர்கள் விசாரித்து வரு கின்றனர்.
நீதித்துறையின் நம்பகத் தன்மையை பாதுகாக்க சட்ட விதிகள் கண்டிப்புடன் பின் பற்றப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ஒரேமுறை மட்டுமே குடியரசுத் தலைவர் நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார். -பிடிஐ