புதுடெல்லி :
நமது நாட்டில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் சூழலில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், முக கவசம் அணிவதை தொடரவேண்டும், கைகளை சுத்தம் செய்வதை தொடர வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது. அதே நேரத்தில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்தப்போவதாக மராட்டியம், டெல்லி மாநிலங்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படி இருக்க, முக கவசம் அணிவது குறித்து மருத்துவ நிபுணர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
டாக்டர் டி.ஜேக்கப் ஜான் (நச்சுயிரியல் நிபுணர்):-
கொரோனா தொற்று நோய் முடிந்துள்ளதால், அதன் பரவலைக்குறைக்க முக கவசத்தின் பயன்பாடு இனி தேவையில்லை. முக கவசம் அணிந்தேயாக வேண்டும் என்ற காலம் முடிந்துவிட்டது. எனவே இதை அணிவது கட்டாயம் என்று கூற இனி எந்த நியாயமும் இல்லை.
ஆனால் காசநோய், காய்ச்சல், வைரஸ், சுவாசநோய்கள், தூசி போன்றவற்றை தவிர்க்க பொது இடங்களில் முக கவசம் அணிவதை ஊக்குவிப்பது நல்லது.
டாக்டர் ரவிசேகர் ஜா ( நுரையீரல் மருத்துவ நிபுணர்):-
முக கவசம் அணிவது கட்டாயம் என்பது தொடர வேண்டும். இப்போதே அதை முற்றிலும் கைவிட முடியாது. நீண்டகால கோவிட் பற்றி நாம் அறிவோம். எனவே தொற்று வராமல் பார்ப்பது சிறந்தது. தொற்றைத்தடுப்பதில் முக கவசங்கள் மட்டுமே முக்கிய பங்களிப்பு செய்கின்றன என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது.
பெரும்பான்மை மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது உண்மை. தொற்றில் இருந்து தடுப்பூசி காக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும். தொற்று ஆபத்தானதாக இல்லையென்றாலும், அதுபல மாதங்களுக்கு உங்களை பலவீனமாக வைத்திருக்கும். தொற்று நோயை தடுப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
டாக்டர் அக்ஷய் பூத்ராஜா (நுரையீரல் மருத்துவ நிபுணர்):-
பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயம் என்ற நிலை கூடாது. ஆனால் நோய்வாய்ப்பட்டவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடுள்ளவர்கள் கூட்டம் கூடுகிற இடங்களுக்கு போகிறபோது முக கவசம் அணிந்து செல்வது நல்லது. முக கவசம் எப்போது அணிய வேண்டும் என்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது.
டாக்டர் அருணேஷ் குமார் (நுரையீரல் மருத்துவ நிபுணர்):-
தடுப்பூசியைத் தொடர்ந்து முக கவசம் அணிவதுதான் 2-வது பயனுள்ள தலையீடு ஆகும். நமது மக்கள்தொகை அதிகம். முக கவசம் அணிவது செலவாகிற விஷயம். முக கவசம் அணிவதைத் தவிர்க்க மக்கள் காரணம் கண்டறிவார்கள்.
ஆனால் முக கவசம், காசநோய், ஒவ்வாமையை ஏற்படுத்தும் தூசு போன்ற பிரச்சினைகள் தவிர்க்க உதவும். வெளியே செல்கிறபோது பொதுமக்கள் தாமாக முன்வந்து முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.