மதுரை வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், எதிர்புறம் வந்த லாரி மீது கார் மோதி நடந்த விபத்தில், ஐடி ஊழியரான இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டவத்தைச் சேர்ந்தவர் 27 வயது இளைஞர் தாமோதரன். இவருக்கு சுமதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியுள்ளன. கணவன், மனைவி இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணியஞ்சி பகுதியில் நடைபெறும் உறவினர் ஒருவரின் இல்லத்திருமண நிகழ்ச்சிக்காக தாமோதரன், தனது மனைவி சுமதி, மாமனார் சீனி செடௌடியார், மாமியார் இந்திரா ஆகியோருடன், கார் ஒன்றில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கார் நிலை தடுமாறி எதிர்புறம் வந்த லாரி மற்றும் வேனில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது. இதில் தாமோதரனின் கார் சுக்கு நூறாக நெருங்கியதோடு, காரில் பயணித்த ஐடி ஊழியரான தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடைய மனைவி, மாமனார், மாமியார் என நான்கு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கப்பபக்கத்தினரால் மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், தாமோதரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தாமோதரன் மனைவி சுமதி, மாமனார், மாமியார் ஆகியோருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தாமோதரன் காரை வேகமாக இயக்கி வந்ததாகவும், மேலும் தூக்க கலக்கத்தில் காரை இயக்கயதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM