வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கோவிட் காலத்தில் மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கியதற்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா நன்றி தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், இரு தலைவர்கள் முன்னிலையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அப்போது, இந்தியா உதவியுடன் அமைக்கப்பட்ட பீஹாரின் ஜெயநகர் முதல் நேபாளத்தின் குர்தா வரையிலான ரயில் திட்டம், மின்சார திட்டத்தை இரு தலைவர்களும் துவக்கி வைத்தனர். நேபாளத்தில் ரூபே கார்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் நேபாள பிரதமர் கூறுகையில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியாவின் வளர்ச்சியை நான் பாராட்டுகிறேன். கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தை இந்தியா கையாண்ட விதத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம். வைரசை எதிர்த்து போராட மருந்து, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை இந்தியாவிடம் இருந்து தான் முதலில் பெற்றோம். இந்தியா நேபாளம் உறவுகள் தொடர்பாக நட்பு ரீதியில் ஆரோக்கியமான ஆலோசனை நடத்தினோம் என்றார்.
பிரதமர் மோடி கூறுகையில், வர்த்தகம் மற்றும் எல்லை தாண்டிய இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்துள்ளோம். ஜெயநகர் – குர்தா ரயில் திட்டம் அதில் , ஒரு அங்கம். இந்தியாவின் நீண்ட கால நண்பர் தேபா. பிரதமராக அவர் ஐந்தாவது முறையாக இந்தியா வந்துள்ளார். இந்தியா நேபாள உறவுகளை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இரு நாடுகள் இடையிலான நட்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவை வேறு எங்கும் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிறிங்களா கூறியதாவது: கோவிட் காலத்தில், நேபாளத்திற்கு ஆதரவு அளித்து, அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ ஆக்ஸிஜன், மருந்துகள் மற்றும் கருவிகளை வழங்கிய இந்தியாவிற்கு தேபா நன்றி தெரிவித்தார்.தொற்று நோய் உச்சத்தில் இருந்த போது இரு தரப்பு உறவுகள் மற்றும் விநியோக சங்கிலி தடையின்றி தொடர்ந்ததற்கும் பாராட்டு தெரிவித்தார். கோவிட் காலத்தில், பல சந்திப்புகள், இரு தரப்பு உறவு வழிமுறைகள், வர்த்தகம் மற்றும் வணிகள் தடையின்றி தொடர்ந்தது. இந்தியா ஆதரவுடன் நேபாளத்தில் பல திட்டங்கள் தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement