கோவையில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் வடவள்ளியை சேர்ந்த ஸ்வேதா என்ற 19 வயது மாணவி கடந்த 5 மாதமாக தங்கி பயின்று வந்தார். இந்நிலையில், அந்த மாணவி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று உடன் தங்கியிருந்த மாணவிகள் பயிற்சி முடித்து வந்து பார்த்தபோது, இரவு தனது அறையில் ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பயிற்சி மைய நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, இது தொடர்பாக கோவில்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில், சம்பவம் நடந்தவுடன் உடனடியாக தகவல் தெரிவிக்காமல் இரண்டு மணி நேரம் கழித்து தகவல் கொடுத்தார்கள் எனவும், தற்கொலை செய்து கொண்ட அறை எதற்காக உடனே சுத்தம் செய்யப்பட்டது என்றும், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை என்றும் கேள்வி எழுப்பி, இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மாணவியின் உடன் பயின்ற மாணவன் யோகேஷ்வரன் மற்றும் தனியார் நீட் பயிற்சி நிர்வாகத்திடம் காவல்துறை முறையாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
இதனிடையே, இது காதல் விவகாரம் தொடர்பான தற்கொலை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாணவிக்கு உடன் படித்து வந்த மாணவனுடன் காதல் ஏற்பட்ட நிலையில், அந்த மாணவனை அவரின் பெற்றோர் சொந்த ஊரான மதுரைக்கு அழைத்து சென்றதாகவும், இதனை மாணவியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடல்நலம் சரியில்லை எனக்கூறி மாணவி நேற்று வகுப்புக்கு செல்லாமல் இருந்த சூழலில் , அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
அந்த மாணவி தங்கியிருந்த அறையில் இருந்து, காதல் கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் இருந்தும் சில குறுஞ்செய்திகள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM