கோவை: கோவை நீட் பயிற்சி மைய விடுதி அறையில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகேயுள்ள கொண்டையம்பாளையத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தில் தற்போது 65 மாணவிகள் உட்பட 130 பேர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில், சீரநாயக்கன்பாளையம் அருகேயுள்ள, கருமலை செட்டிபாளையம், பாரதி வீதியைச் சேர்ந்த பெருமாள் மகள் ஸ்வதோ (18), கடந்தாண்டு நவம்பர் 16-ம் தேதி முதல் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இவர் பயிற்சி மையத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கி தினமும் பயிற்சிக்கு சென்று வந்தார். மாணவி ஸ்வதோவுடன், திருச்சியைச் சேர்ந்த பிரியங்கா (18), கரூரைச் சேர்ந்த காவ்யா(18) ஆகியோர் உடன் தங்கி பயிற்சிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஏப்.1) உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நீட் தேர்வு பயிற்சிக்கு ஸ்வேதா செல்லவில்லை. அவருடன் தங்கியிருந்த மற்ற இரண்டு மாணவிகளும் அன்று மாலை வழக்கம் போல் பயிற்சிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர், ஸ்வேதாவுக்கும் சேர்த்து உணவு வாங்கிக் கொண்டு பிரியங்கா தனது அறைக்கு சென்றார். அறைக்கதவை திறக்க முயன்ற போது முடியவில்லை. கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டு இருப்பது தெரிந்தது. ஜன்னல் வழியாக பிரியங்கா அறைக்குள் பார்த்த போது, ஸ்வேதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் விடுதியின் காப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் அறைக்கு வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து, தூக்கில் தொங்கிய நிலையிலிருந்த இருந்த மாணவி ஸ்வேதாவின் உடலை கீழே இறக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, ஸ்வேதா ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
போலீஸார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில், இப்பயிற்சி மையத்தில் மதுரையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். ஸ்வேதாவும், அந்த மாணவரும் நெருங்கிய நட்பாக பழகி வந்துள்ளனர். இதையறிந்த இருவரின் பெற்றோரும், ஒருவருக்கு ஒருவர் பேசக் கூடாது என கண்டித்துள்ளனர். பின்னர், கடந்த ஜனவரி மாதம் 27ம் இப்பயிற்சி மையத்தில் இருந்து அந்த மாணவர் நின்று விட்டார்.
அந்த மாணவருடனான நட்பை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தனது மகள் ஸ்வேதாவின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.