வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புது டில்லி: ரஷ்யாவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில் இந்தியா ஆதரிக்கிறது. இதனை விரும்பாத அமெரிக்கா, சீனா எல்லை மீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா பாதுகாப்புக்கு ஓடி வராது என எச்சரித்துள்ளது.
தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டின் ராணுவ தளங்களை ரஷ்ய படைகள் அழித்து வருகின்றன. ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவிலிருந்து தங்களின் வியாபாரத்தை குறைத்துக்கொண்டுள்ளன. இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை பிரதமர் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள பொருளாதார தடை உத்திகளுக்கான தலைவர் தலீப் சிங் கூறியதாவது: சீனாவுடன் எல்லையில் மீண்டும் மோதல் ஏற்பட்டால் இந்தியா ரஷ்யாவை நம்பி இருக்க முடியாது. சீனாவுடனான உறவில் ரஷ்யா ஜூனியர் பார்ட்னராக இருக்கும். ரஷ்யா மீது சீனா பெறும் அதிக செல்வாக்கு இந்தியாவிற்கு சாதகக்குறைவை ஏற்படுத்தும். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை சீனா மீறினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ரஷ்யா ஓடி வரும் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். எங்கள் பொருளாதாரத் தடைகள் மற்றும் எங்களுடன் இணைவதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக இந்தியா வந்துள்ளேன். என கூறினார்.
Advertisement