கோடை விடுமுறையை முன்னிட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு செல்வதில் குறிப்பாக மும்பை, டெல்லி விமான கட்டணம் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது, 10 ஆயிரத்தை நெருங்கியுள்ள கட்டணத் தொகை, ஏப்ரல் நடுப்பகுதியில் மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், விமான டிக்கெட் கட்டணம் ரூ3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மும்பைக்கான விமான கட்டணம் 8,500ஆகவும், டெல்லியின் கட்டணம் ரூ11 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது. பெங்களூரின் விமான கட்டணம் ரூ4 ஆயிரமாக உள்ளது. இந்த கட்டணம், கோவிட்க்கு முந்தைய நாட்களில் 2,500 முதல் 3 ஆயிரமாகவே இருந்தது.
தொற்றுநோய் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சுற்றுலா பயணமும் மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை-கொல்கத்தா வழித்தடத்துக்கான விமானக் கட்டணம் 6,500லிருந்து 12,000 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், சென்னையில் இருந்து கோவா மற்றும் ஸ்ரீநகருக்கான டிக்கெட் விலை14,000 க்கு மேல் உள்ளது.
உள்நாட்டிற்குள் கோடை விடுமுறையை கழித்திட வெளிமாநிலம் செல்வேராின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரன் பாலன் கூறியதாவது,” கோடை விடுமுறை பயணத்தின் முன்பதிவு காரணமாகவும், வெளிநாடு செல்ல மும்பை, டெல்லி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது காரணமாகவும், உள்நாட்டு விமானக் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. டெல்லி போன்ற இடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, வணிக பயணம் அதிகமாக உள்ளது. டிராவல் மற்றும் டூர் ஆபரேட்டர்கள் முன்கூட்டியே இருக்கைகளை புக் செய்திட ஆரம்பித்துள்ளனர்” என்றார்.
விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “சர்வதேச விமானத்தில் ஏறுவதற்கு நுழைவுவாயிலான மும்பை, டெல்லி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதன் விமான டிக்கெட் தேவையும் அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து ஐரோப்பா நாடுகளுக்கும், அமெரிக்கா செல்வதற்குமான வாய்ப்புகளும் இல்லை. எனவே, மக்கள் டெல்லி, மும்பை செல்ல விரும்புகின்றனர்” என்றார்.
இதையொட்டி, விமான நிறுவனங்களும், சென்னை விமான நிலையத்திலிருந்து அதிகளவில் உள்நாட்டு விமானங்களை இயக்கிவருகின்றன. ஒரு நாளைக்கு மும்பைக்கு 20 விமானங்களும், டெல்லிக்கு 19 விமானங்களும் உள்ளன. சென்னை விமான நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 40,000 உள்நாட்டுப் பயணிகளைக் கையாண்டு வருகிறது.
கோடை மாதங்களில் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத் துறைகளும், சென்னையில் விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளன.
கோவா, ஒடிசா, கர்நாடகா, ஹிமாச்சல், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களின் சுற்றுலாத் துறைகள், பயணிகளைக் கவரும் வகையில் சென்னையில் நடைபெறும் சுற்றுலா கண்காட்சியில் தங்கள் இடங்களை விளம்பரப்படுத்தி வருகின்றன. 13 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.
ஒடிசா சுற்றுலாத்துறையின் இணை இயக்குனர் விஸ்வஜித் ரௌத்ரே கூறுகையில், சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் பூரி, புவனேஷ்வர் மற்றும் மாநிலத்தின் பிற இடங்களுக்கு வருகை தருகின்றனர். ஒடிசாவுக்கு அதிக பார்வையாளர்களை வரும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது என்றார்.