அண்ணாநகர்:
சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்று செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதற்கு முன்பு பல இடங்களில் பெண்களை தரதரவென இழுத்துச் சென்றும், கீழே தள்ளி விட்டும் செயினை பறித்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
ஆனால் சமீப காலமாக அது போன்று ஈவுஇரக்கமில்லாமல் வழிப்பறி திருடர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுவது சற்று குறைந்திருந்தது.
இந்த நிலையில் அண்ணா நகரில் ஒரே தெருவில் 2 பெண்களை குறி வைத்த செயின் பறிப்பு கொள்ளையர்கள் அவர்களை கீழே தள்ளி செயினை பறித்த சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது.
சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையம் இருக்கும் பகுதியில் உள்ளது ஒய் பிளாக். இங்கு சாலையில் நடந்து சென்ற 2 பெண்களை குறி வைத்து மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்கள் இருவர் அடுத்தடுத்து செயினை பறித்தனர்.
நேற்று முன்தினம் பட்டப் பகலில் மாலை 3 மணி அளவில் இந்த செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தி உள்ளன.
ஒட்டேரி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் அண்ணாநகரில் வீட்டு வேலை செய்கிறார். அவர் ஒய் பிளாக்கில் நடந்து சென்றபோது 3 பவுன் செயினை கொள்ளையர்கள் பறித்தனர்.
தூத்துக்குடியில் இருந்து மகள் வீட்டுக்கு வந்திருந்த பிரபாவதி என்ற பெண்ணி டம் கொள்ளையர்கள் 5 பவுன் செயினை பறித்தனர். இருவரையும் கீழே தள்ளி விட்டுவிட்டு துணிச்சலுடன் கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்றனர். மோட்டார்சைக்கிளை ஒரு கொள்ளையன் ஓட்டிச் செல்ல, பின்னால் அமர்ந்திருக்கும் கொள்ளையன் திடீரென பைக்கில் இருந்து கீழே இறங்கி அடுத் தடுத்து செயின் பறிப்பில் ஈடுபடுகிறான். தூரத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற கொள்ளையன் காத்திருக்கிறான்.
செயினை பறித்துக் கொண்டு கொள்ளையன் தப்பி ஓடும்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் விரட்டிச் சென்று பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் கொள்ளையனோ அவர்களின் பிடியில் சிக்காமல் வேகமாக ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்புகிறான்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.