சென்னை: சொத்து வரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது, வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்து வரி 150 % வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்தகூடாது.
சொத்து வரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்; பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.