சென்னை:
தேர்தல் வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் இன்று கையெழுத்து போட்டு விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சொத்து வரியை அரசு உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. பொருளாதார மேதைகளை அரசு நியமித்து 300 நாட்கள் ஆகிறது. ஆனால் பொருளாதார நடவடிக்கையை மீட்க எந்தவித செயலும் தற்போது வரை இல்லை. வரியை உயர்த்தாமல் பொருளாதாரத்தை மேம்படுத்தியது
அ.தி.மு.க.
அரசு தான். அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை
வரக்கூடிய நாட்களில் மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம் ஆகியவையும் உயரலாம்.
அ.தி.மு.க.
ஆட்சிக்காலத்தில் சொத்து வரி உயர்த்த பரிந்துரைத்த நிலையில் எதிர்த்து விட்டு இப்போது இரவோடு இரவாக சொத்து வரி உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
5 வருட ஆட்சி முடியும் பொழுது கூடுதலாக 5 லட்சம் கோடி கடனாக மாறும்.
அ.தி.மு.க.
ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை. தி.மு.க. அரசின் தவறுகளை தொகுத்து, மத்திய அரசிடம் வழங்குவோம்.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.