நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் மாணவ மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இரவு நேரங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இதனால், காவல்துறையினர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். நேற்று இரவு பேருந்திற்காக ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
நேற்று இரவு 9:30 மணியளவில் திடீரென வாலிபர் ஒருவர், பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இதனையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்த மற்றொரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதே இடத்தில் அந்தப் பெண்ணின் சகோதரர் அந்த வாலிபரை பிடித்து பலத்த அடி கொடுத்தார். சிறிது நேரத்தில் அவரது பிடியில் இருந்து வாலிபர் தப்பி ஓடினார்.
மேலும் அவரை விடாமல் பிடித்து பொதுமக்கள் மீண்டும் பலமாக தாக்கினர். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபர் நான் பெண்களிடம் சில்மிசம் செய்யவில்லை பேருந்தில் ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் பணம் கேட்டதாக கூறி போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதார். இதன்பிறகு போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கையில், கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணியை வலுப்படுத்த வேண்டும் என்றும், பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.