புதுடெல்லி: டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 சதுரமீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில், 2013-ல் திமுகவுக்கு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது.
பின்னர், இங்கு திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் விரைவில் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி பணிகள் கடந்த டிசம்பரில் முடிவுற்றன. மொத்தமாக 8 ஆயிரம் சதுரஅடியில் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில், அண்ணா, கருணாநிதி பெயரில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் கட்டிடத்தை திறக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் அதிகரித்ததால் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் திமுக கொடியை ஏற்றிவைத்தார். மேலும், கட்டிடத்தின் இரண்டு புறங்களில் அமைக்கப்பட்டிருந்த திமுகவின் நிறுவனர் அண்ணாவின் சிலையை கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திறந்துவைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்.
இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவை காங். தலைவர் சோனியா காந்தி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஃபரூக் அப்துல்லா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில், அகிலேஷ் யாதவ், அமர் பட்நாயக், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் Karunanidhi – A Life என்ற புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக் கொண்டார். A Dravidian Journey என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.