டெல்லி: டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், ஒன்றிய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக அலுவலக திறப்பு விழாவையொட்டி டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லியில் எத்தனையோ தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு கட்சி அலுவலகங்கள் இருந்தாலும் கூட திமுக கட்டி எழுப்பியிருக்கும் அண்ணா-கலைஞர் அறிவாலயம் தான் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அகில இந்திய அளவில் இப்போது முக்கியமான கட்சியாக திமுக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக ஏற்படுத்திய திராவிட மாடல் ஆட்சி நாட்டில் உள்ள அனைத்து முதல்வர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த அறிவாலயத்தை கட்டி சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக மாற்றிய பெருமை மறைந்த கலைஞருக்கு உண்டு. தமிழகத்திலேயே ஒரு கட்சி அலுவலகத்தை இத்தனை கலை நயத்துடன் கட்டிய ஒரே தலைவர் கலைஞர்தான் என்று பல தலைவர்கள் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதுவரை கட்சி அலுவலகம் என்றால் சாதாரண கட்டிடமாகத் தான் இருக்கும்.ஆனால் அண்ணா அறிவாலயம் தான் கலை நயத்துடன் கூடிய ஒரு பிரமாண்ட மாளிகையாக உருவெடுத்தது. அதே வழியில் இப்போது திமுகவுக்கு இன்னொரு பெருமையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரமாண்டமாக அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை உருவாக்கியுள்ளார். டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில் தான் திமுக தனது இந்த புதிய மாளிகையை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது முடிக்கப்பட்டது. டெல்லி அரசியலின் மையப்புள்ளியாக மாற உள்ள கட்டிடம் இன்று திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கி அனைத்துத் தலைவர்களுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 3 மாடிகளுடன் கூடியதாக உருவாகியுள்ளது. பிரமாண்ட தூண்கள், அழகிய வடிவமைப்பு என அழகு மாளிகையாக இது உருவெடுத்துள்ளது. அனைத்து நவீன வசதிகளுடன் கூடியதாக அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திமுக கட்டியுள்ளது. இந்த கட்டடத்தின் முன் பகுதியில் அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக கொடி பறக்கும் வகையில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிரமாண்ட அறிவாலயத்த்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதையடுத்து, கட்டிடத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார். பின்னர் கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும், கலைஞர் கருணாநிதியின் சிலையை கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவும் திறந்து வைத்தனர். பின்னர் முரசொலி மாறன் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, சோனியா காந்தி குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது, ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய ‘‘கருணாநிதி ஏ லைஃப்’’ என்ற நூலை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக் கொள்கிறார். பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதிய ‘‘ஏ திராவிடன் ஜார்னி’’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பெற்றுக் கொண்டார்.இதையடுத்து, கட்டிடத்தின் 3வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் பெயரிலான நூலகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெறுகிறது. அண்ணா- கலைஞர் அறிவாலய திறப்பு விழா நிகழ்ச்சியால், இந்த கட்டிடம் அமைந்துள்ள தீன்தயாள் மார்க் பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றி திமுக கொடி பறக்க விடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கட்சியினர் ஏராளமானோர் டெல்லிக்கு படையெடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திறப்பு விழா டெல்லியில் களை கட்டியுள்ளது.