“டெல்லி பயணத்தின் மர்மத்தை மக்களுக்கு விளக்குவாரா முதலமைச்சர்? பதவிக்கு வந்த 10 மாதகாலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதலமைச்சர், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை டெல்லியில் சென்று சந்தித்திருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன. முதலமைச்சரின் வாய்ஜாலத்திலும் நாடகத்திலும் மயங்க பிரதமர் மோடி இந்திரா காந்தி அல்ல… சட்டவிரோதப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டு உண்மையெனில் உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழலுக்கு எதிரான நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி என்பதை தி.மு.க-வினர் உணரும் நாள் வரும்”
தமிழக முதல்வர் மு.கஸ்டாலினின் மூன்று நாள் டெல்லி பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனலாகக் கக்கிய வார்த்தைகள் இவை. எடப்பாடி பழனிசாமி பற்றவைத்த இந்த நெருப்பு தமிழக அரசியல் களத்தில் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் கிடைத்துள்ள வரவேற்பாலும், மரியாதையாலும் எடப்பாடி பழனிசாமிக்குப் பொறாமை ஏற்பட்டுள்ளது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். ஒவ்வொரு முறை டெல்லி சென்றபோதும், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நலனையும், உரிமையையும் அடகுவைத்துள்ளார். ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கான கோரிக்கைக்காகவே பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். முதலமைச்சர் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த ஒரு தேவையும் முதல்வர் ஸ்டாலினுக்குக் கிடையாது” என எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு டெல்லியிலேயே பதிலடி கொடுத்துள்ளார் தொழிற்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு. தி.மு.க – அ.தி.மு.க-வினரிடையே மிகப்பெரிய கருத்து மோதலாக இந்த விவகாரம் வெடித்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தின் முதல்வர் பிரதமரைச் சந்திப்பதை இவ்வளவு அரசியலாக்க வேண்டுமா என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்,
“தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, பாரதப் பிரதமர் மோடி மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தபோது பிரதமர் என்றுகூட பார்க்காமல் கறுப்புக் கொடி காட்டியவர்தான் இப்போதைய முதல்வர் ஸ்டாலின். இப்போது மட்டுமல்ல, 1977-ல் அன்றைக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, கொடியில் உள்ள தடியால் தாக்கியும் கல்லால் தாக்கியும் வன்முறை செய்தவர்கள்தான் தி.மு.க-வினர். ஆனால், 1980-ல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என இந்திராகாந்தியுடனேயே கூட்டணி வைத்தார்கள். அதேபோல, 1997-ல் பா.ஜ.க-வை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு, பின்பு 1999-ல் பா.ஜ.க-வுடன் இணைந்து மத்திய அமைச்சரவையில் பங்கேற்றார்கள். இவர்களுக்குக் கொள்கை கிடையாது. லட்சியம் கிடையாது. பதவி வேண்டும், பணம் வேண்டும். அதுதான் இவர்கள் லட்சியம். இப்போதும் பா.ஜ.க அமைச்சரவையில் இடம் கிடைத்தால் சேர்வதற்குத் தயங்கமாட்டார்கள். பா.ஜ.க-வை இவர்கள் உண்மையாகவே எதிர்க்கிறார்களா இல்லை எதிர்ப்பதுபோல் வேஷம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றுகிறார்களா?
இவர்கள் நடத்தும் அரசியல் நாடகத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதைத்தான் எங்கள் இணை ஒருங்கிணைப்பாளர் செய்துகொண்டிருக்கிறார். இதை பொறாமை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கடந்த காலத்தில் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒருகணம் அமைச்சர் யோசித்துவிட்டு வார்த்தைகளை விடவேண்டும். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சிலரின் மீது சி.பி.ஐ வழக்கு, அமலாக்கப்பிரிவு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகளில் நடவடிக்கைகளை குறைத்து அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தி.மு.க-வின் மீது களங்கம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் பா.ஜ.க-வுடன் உறவு வைப்பதற்குத் துடிக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்கிறார் அவர்.
இந்த விமர்சனங்கள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம்,
“எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்பாக அமைச்சராகவும் முதலமைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். ஆனால், அவரின் விமர்சனங்கள் எல்லாம் நான்காம்தர பேச்சாளர்களைப்போல மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பிரதமர் மோடி இயக்குவதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். இது இந்திய அரசிலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. தவிர, தி.மு.க தலைவர் தற்போது ஏழு கோடி மக்களின் பிரதிநிதியாக தமிழக முதல்வராக டெல்லி சென்றிருக்கிறார். அவர் நாட்டின் பிரதமரைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, 1,280 பக்கங்களில் சரியான ஆதரங்களுடன் அ.தி.மு.க மீது ஆளுநரிடம் புகார் கொடுத்தோம். எங்களைவிட அதிகமான பக்கங்களோடு பா.ம.க புகார் கொடுத்தது. அப்படி எங்களின்மீது ஏதாவது தவறிருந்தால் ஆதாரங்களோடு பிரதமரிடம் புகார் கொடுங்கள். ஆனால், மக்களின் நலனுக்கான கோரிக்கைளுக்காக பிரதமரைச் சந்தித்ததைக் கொச்சைப்படுத்துவது என்பது அநாகரிகமான செயல். உண்மையிலேயே எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழக மக்களின் நலனின்மீது பொறுப்பு இருக்கிறது. ஆளுநரிடமோ பிரதமரிடமோ கோரிக்கை வைக்கும் இடத்தில்தான் அவரும் இருக்கிறார். ஆனால், அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு இப்படி நடந்துகொள்கிறார். அதுமட்டுமல்ல, தான் தவறானவராக இருப்பதால் எங்கள் தலைவரையும் அவர் அப்படி நினைத்துக் கொள்கிறாரே தவிர அவரின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. ஊழலுக்கு எதிரான நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி என்கிறார் எடப்பாடி. அப்படி என்றால் முதலில் அவர்மீதும் வேலுமணியின் மீதும்தான் நடவடிக்கை பாயும். குறைந்தபட்ச அரசியல் அறிவுகூட தனக்கு இல்லை என்பதைத்தான் இந்த அறிக்கையின்மூலம் அவர் நிரூபத்திருக்கிறார்” என்கிறார் கடுமையாக.