குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க வீரர் ஷுப்மான் கில் 84 ஓட்டங்கள் குவித்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசனில், 10-வது லீக் ஆட்டம் இன்று புனேவில் இரவு 7:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச தேர்வு செய்ய, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலில் துடுப்பாடியது.
துவக்க வீரர் மேத்யூ வேட், ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடினார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து முன்னேறினார்.
மறுமுனையில் விஜய் சங்கர் 13 ஓட்டங்கள், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 31 ஓட்டங்கள் சேர்த்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் 84 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ராகுல் திவாட்டியா 14 ஓட்டங்களிலும், அபினவ் மனோகர் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தது பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் சேர்த்தது. டேவிட் மில்லர் 20 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
டெல்லி தரப்பில் முஷ்பிகுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார். கலீல் அகமது 2 விக்கெட், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.