டெல்லி: 4நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் வாக்கிங் சென்றார். எளிமையான முறையில் வாக்கிங் சென்ற முதல்வர் ஸ்டாலினை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பூங்காவில் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சிக்கு வந்தவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தியதுடன், பலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் இன்று மாலை திறக்கப்படுகிறது. முன்னதாக மார்ச் 30ந்தேதி டெல்லி சென்ற முதல்வர், ஏப்ரல் 1ந்தேதி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, நிதின்கட்கரி, ராஜ்நாத் சிங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 2ந்தேதி) மத்தியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்து பேசியதுடன், நிலுவைத் தொகைகளையும் உடனே விடுவிக்கும்படி வலியுறுத்தினார். பின்னர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியதுடன், டெல்லியில் உள்ள அரசு பள்ளி மற்றும் மொஹல்லா மருத்துவமனையையும் பார்த்து, அதுகுறித்த தகவல்களை கேட்டறிந்ததார்.
இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் டெல்லி வாழ் தமிழர்கள் முதலமைச்சரை ஆர்வமுடன் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலர் அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
முதல்வர் எளிமையான முறையில் எந்தவித பாதுகாப்புமின்றி தனியாக நடைபயிற்சி மேற்கொண்டதை கண்ட டெல்லிவாசிகள் வியப்படைந்தனர்,.