கோபாலபுரம்: ஆந்திராவில் தனியார் சொகுசு பேருந்தில் கடத்தப்பட்ட ரூ. 4.76 கோடி பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தனியார் சொகுசு பேருந்தில் ரூ.4 கோடியே 76 லட்சம் மற்றும் நகைகள் கடத்தப்படுகிறது எனும்ரகசிய தகவல் கிடைத்ததும், ஆந்திர மாநிலம், மேற்கு கோதா வரி மாவட்டம் போலீஸார் நேற்று காலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப் போது, நல்லஜர்லு மண்டலம், வீரபள்ளி சோதனை சாவடியில் விஜயநகரத்தில் இருந்து குண்டூர் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அந்த பேருந்தில் லக்கேஜ்கள் வைக்கும் இடத்தில் ஒரு பை இருந்தது. அதனை சோதனையிட்டதில் அதில், ரூ. 4 கோடியே 76 லட்சம் ரொக்கமும், 250 கிராம் எடையில் தங்க நகைகளும் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பேருந்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் யாருக்குமே அந்த பை யாருடையது என தெரியவில்லை என கூறினர். எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்படும் அந்த ரொக்கமும், நகையும் யாருடையது என சந்தேகத்தின் பேரில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உட்பட பயணிகள் 5 பேர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டதோடு, சொகுசு பேருந்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.