சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பர்மா காலனியில் ஊராட்சி தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வரும் ஒன்றாம் வகுப்பு மாணவி தீபா வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்திருந்தாள்.
வகுப்பறைக்கு சென்று போது 50 ரூபாய் நோட்டு அங்கு கீழே கிடந்துள்ளது. அதனைப் பார்த்த சிறுமி எடுத்து வைத்துக்கொண்டு பின்னர், ஆசிரியை ராமலட்சுமி வகுப்பறைக்கு வந்தபோது அந்த ஐம்பது ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தாள்.
அப்போதுதான் அந்த ஆசிரியைக்கு தான் முந்தையநாள் தவறிய 50 ரூபாய் பற்றி நினைவுக்கு வந்தது. உடனே சிறுமி தீபா பிரபாவின் நேர்மையை பாராட்டி ஆசிரியை கை குலுக்கினார். வகுப்பறையில் உள்ள மற்ற மாணவ- மாணவிகளையும் கைத்தட்டு சொல்லி அவளை ஊக்கப்படுத்தினார்.
பின்னர் ஆசிரியர் ராமலட்சுமி மாணவி தீபாவை தலைமையாசிரியர் ஞானசேகரிடம் அழைத்துச் சென்று சிறுமியின் செயலைக் கூறினார்.
இதனால் வியப்படைந்த தலைமையாசிரியர் ஞானசேகர் அந்த ஒன்றாம் வகுப்பு சிறுமியை கௌரவிக்கும் வகையில் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். நேற்று பள்ளி பணி நேரம் முடியும் வரை சிறுமியை தலைமையாசிரியை இருக்கையில் அலங்கரித்தது குறிப்பிடத்தக்கதாக திகழ்கிறது.