ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தென் ஆப்பிரிக்கா தொற்று நோய் களுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என தென் ஆப்பிரிக்க பாராளுமன்றத்தில் அந்நாட்டு துணை அதிபர் டேவிட் மபுசா தெரிவித்துள்ளார்.
நாங்கள் செய்யக்கூடியது, எங்கள் மக்களிடம் சென்று தடுப்பூசி போடுமாறு ஊக்குவிப்பதுதான் என அவர் கூறியுள்ளார். அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பரவலின் ஐந்தாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பேசிய டேவிட் மபுசா, ஐந்தாவது அலையின் வீரியம் முந்தைய நிலைகளை விட குறைவாகவே இருக்கும் என்று சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறினார்.
தென் ஆப்பிரிக்க மக்களிடம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.