ஜம்முவிலிருந்து நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன மன்சர், சுரின்சர் ஏரிகள். `இரட்டை ஏரிகள்’ (Twin Lakes) என்ற அடைமொழி அவற்றுக்கு உண்டு. பதினைந்து வருடங்களுக்கு முன்புவரையிலும் அவை புனிதமான நீர்நிலைகளாகக் கருதப்பட்டதால் அங்கு படகோட்டுவது, நீராடுவது போன்ற உல்லாச விஷயங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. சமீபகாலங்களில் புனித அடையாளங்கள் மெல்ல மறைந்து, சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்துக்காக சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் பொருட்டு மன்சர்,சுரின்சர் ஏரிகளில் படகோட்டுதல், மீன்பிடிப் பயிற்சிகள் ஆகியவற்றை அரசாங்கம் செயல்படுத்திவருகிறது.
ஜம்முவில் வசித்தபோது அந்த ஏரிகளுக்கு நான் நான்கைந்து முறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மனிதர்களுடன் சென்றதால் அவ்விடம் வெவ்வேறு அனுபவங்களை எனக்கு அளித்தது. வாழ்க்கையும் பயணங்களும் உடன் செல்லும் மனிதர்களால் மாறுபட்ட அர்த்தங்களைத் தருகிறதென்பதை அனுபவத்தின் வழியாக அறிந்துகொண்ட நாள்களவை. ஜம்முவிலிருந்து சில கிலோமீட்டர்கள் மலைப்பகுதிகளில் பயணிக்கத் தொடங்கியதுமே நகர வாழ்வின் இரைச்சலும் சலசலப்பும் குறைந்து, வனப்பகுதிக்குள் முன்னேறிச் செல்கையில் பெரும் நிசப்தம் மனதை நிறைக்கும். அவ்வமைதியில் மனதின் எண்ணங்களுக்குக் குரல் வந்துவிடும். `எண்ணங்களுடன் அமைதியேற்படுத்திக்கொள்ளத் தவறும்போதே மனிதன் பேசத் தொடங்குகிறான்’ என்கிறார் கலீல் ஜிப்ரான். மனதின் எண்ணங்கள் யாவும் ஒரே அலைவரிசையில் இயங்கும்போது அங்கு உரையாடலுக்கோ, வாக்குவாதத்துக்கோ இடமில்லாமல்போகிறது.
அவளே அவளுக்குள் பல குரல்களாக மாறிக்கொள்கிறாள்.
வசந்த காலம் முடிந்து, கோடைக்காலம் தொடங்கியிருந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் எங்கள் குடியிருப்பைச் சேர்ந்த சிறுவர்களை அழைத்துக்கொண்டு மன்சர், சுரின்சர் ஏரிக்கு சுற்றுலா சென்றுவரத் திட்டமிட்டிருந்தேன். அச்சிறுவர்களில் பெரும்பாலானோர் நான் பயிற்றுவித்த பள்ளியின் மாணவர்கள் என்பதால், பெற்றோர்களுக்கும்ல அவர்களை என்னுடன் அனுப்புவதில் ஐயமேதும் இருக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தின் சாஹரன்பூர் பகுதியைச் சேர்ந்த நஃபீஸ் எனும் சிறுவன் தன் தந்தையுடன் சில தினங்களுக்கு முன்பு ஜம்முவுக்கு வந்திருந்தான்.
அவர்களுக்கு முதல்தளத்தில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நான் தரைத்தளத்தில் குடும்பத்தோடு வசித்தேன். நஃபீஸும் அவனுடைய தந்தையும் மட்டுமே குடிவந்தனர். அவனுடைய தாய், உடன்பிறந்தோர் யாரும் அவர்களுடன் வரவில்லை என்பது சில தினங்களிலேயே புலப்பட்டுவிட்டது. நஃபீஸின் தந்தை ஹாசிம், வயது முதிர்ந்தவராகத் தெரிந்தார். நஃபீஸைத் தனது கடைசி மகன் என்று அறிமுகம் செய்துவைத்தார்.
சில தினங்களிலேயே நஃபீஸ் என்னுடன் இணக்கமாகிவிட்டான். “நான்தான் உங்க தலைமேல உக்காந்திருக்கேன். மேல இருந்து உங்களைப் பார்த்துக்கிட்டே இருப்பேன்” என மந்திரக் கதைகளில் வரும் கதாபாத்திரம்போல் சுவாரசியமாகப் பேசுவான்.
பெரும்பாலும் வீட்டில் தனியாக இருக்கும் அவன், ஹாசிம் அலுவலகம் செல்லும்வரை அவருக்குப் பணிவிடைகள் செய்துவிட்டு அவர் சென்றதும், படியிறங்கி வந்து தோட்டங்களிலும் மலையடிவாரத்திலும் அலைந்து திரிவான். வீட்டில் தொலைக்காட்சியோ,வேறு பொழுதுபோக்கு அம்சங்களோ ஹாசிம் அவனுக்காக வைத்திருக்கவில்லை. அவனது துணிப்பையும் புத்தகப்பையும் தவிர அவனிடம் வேறெதுவும் இருக்கவில்லை. உணவு சமைக்கத் தேவையான சில பாத்திரங்கள் மட்டும் சமையலறையில் இருந்தன. அவற்றையும் பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கி வைத்திருப்பதாக அவனே ஒருமுறை என்னிடம் கூறினான். ஆளரவமற்ற பிற்பகல் வேளைகளில் அவனது முகம் மட்டும் தெரியும்படியாக ஜன்னல் கம்பிகளுக்கிடையே முகத்தைத் துருத்திவைத்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான் நஃபீஸ். ஒருமுறை “டேய் அப்படி முகத்தைவெச்சு பார்க்காதே… கீழ இருந்து பார்க்க பயமா இருக்குடா’’ என்றேன். “இப்படி எதாவது செஞ்சாத்தானே நானிருக்கேன்னு உங்களுக்கெல்லாம் தெரியும்…’’ என்று உரக்கக் குரலெடுத்துச் சிரித்தான். அப்போது நிஜமாகவே அவனது முகம் என்னை அச்சுறுத்துவதாக இருந்தது. நஃபீஸுக்கு இயல்பான மனித முகம் அமைந்திருக்கவில்லை. அவனது காதுகள் இருபுறமும் பெரிதாக விடைத்திருந்தன. கண்கள் இரு கோடுகளைப்போல் மெல்லிசானவை. தனது அத்தனை உணர்வுகளையும் சிரிப்பின் மூலமாகவே வெளிப்படுத்தினான் நஃபீஸ்.
இரவு நேரங்களில் அவன் வீட்டிலிருந்து பயங்கரமான அலறல் சப்தம் கேட்பது வாடிக்கையானது.
பதற்றத்தோடு அவனை அழைத்து விசாரித்தால், எனது அத்தனை கேள்விகளுக்கும் நஃபீஸ் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தான். “என்னடா அப்பா அடிச்சாரா?’’ எனக் கேட்டேன் ஒருமுறை. “ஆம்’’ என்று தலையசைத்தான்.
“ஏன் அடிச்சாரு?’’
“தெரியலை. ஆனா அப்பா அடிப்பாரு. அப்பாவுக்கு ஆயிரம் கவலையிருக்கும்ல… அதனால என்னைய அடிப்பாரு. காலையில மன்னிப்புக் கேட்டுட்டுப் போயிருவாரு” என்று சிரித்தான். அச்சிறுவனின் குழந்தைப் பருவ இன்னல்களில் பெரிதாகப் பங்கெடுக்க முடியாமற்போனாலும் என்னால் இயன்ற உதவிகளை அவனுக்கு செய்யத் தொடங்கினேன்.
எங்களது சுற்றுலாத் திட்டத்தில் அவனை இணைத்துக்கொள்வதற்கு ஹாசிம் முதலில் சம்மதிக்கவில்லை. அவர், பெண்களிடம் பேசுவதை அறவே தவிர்த்தார். அதனால் அவரை அணுகிப் பேசுவது எனக்கு சிரமமாக இருந்தது. மற்ற ஆண்கள் மூலம் அவரிடம் சிலமுறை வேண்டுகோள் வைத்த பிறகு அரைமனதாகச் சம்மதித்தார். எங்களுடன் வண்டியில் வந்தமரும் வரை நஃபீஸுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஒருவழியாக வண்டி வாயிலைக் கடந்து வெளியேறிய பின்னரே அவன் முகத்தில் நிம்மதியின் புன்னகையைக் காண முடிந்தது.
“ஜாலியா இரு நஃபீஸ், இனி யாரும் உனக்குத் தடை சொல்ல மாட்டாங்க’’ என்று நான் உத்தரவாதம் அளித்ததும் அவன் குதூகலமானான். வழிநெடுகிலும் நிறைய பேசினான். மற்ற சிறுவர்கள் உணவருந்திக்கொண்டும், பாடல்கள் பாடிக்கொண்டும் திளைத்திருக்கையில் நஃபீஸ் என்னிடம் கதைகள் கூறினான். அவனிடம் பேச அவ்வளவு விஷயமிருந்ததை அப்போது புரிந்துகொண்டேன். காணும் பொருள்களையெல்லாம் அவற்றுக்குச் சற்றும் தொடர்பே இல்லாதவற்றோடு உருவகப்படுத்திப் பேசினான்.
ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாதிருந்ததை எண்ணி, “மரம் எப்படி தண்ணீராகும் நஃபீஸ்… தொடர்ப்புபடுத்துவதில் ஒரு நியாயம் வேண்டாமா?’’ எனக் கேட்டேன். அவன் சிரித்தபடி, “நான் அப்படித்தான் செய்வேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது’’ என்றான். “மரம் என்பது வேரூன்றி ஓரிடத்தில் நிற்பது, தண்ணீருக்கு வேர்களில்லை, அது பாய்ந்து செல்லும் தன்மைகொண்டது. பின் எப்படி அவ்விரண்டையும் தொடர்ப்புபடுத்தினாய்?” என்றேன். “வேரிருக்கும் தண்ணீர் மரமானது. வேரில்லாத பசுமையான மரங்கள் உருமாறி தண்ணீராகின. மழை மரங்களால்தானே உருவாகிறது?’’ என்றான். அவன் கூறுவதை முற்றிலுமாக ஏற்க முடியாமற்போனாலும் அவனது கூற்றில் தவறில்லை என்றும் புரிந்தது. நஃபீஸின் உலகத்தில் பறவைகள் காற்றாகின, மரங்கள் நீராகின, நீர் மரங்களானது.
`இயற்கையின் படைப்பையோ அல்லது யாதொரு கலைப் படைப்பையோ ஒருவரால் முழுவதுமாக வரையறுத்துவிட முடியாது. அது ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்து அமைகிறது’ என்ற எழுத்தாளர் போர்ஹேவின் கூற்று நினைவுக்கு வருகிறது. சர்ரியலிசம் எனப்படும் அகவய எழுத்தின் முன்னோடிகளுள் ஒருவரான போர்ஹேவின் கதைகளிலும் இத்தகைய முரண்பட்ட உருவகங்கள் நிறைந்திருப்பதை நம்மால் காண முடியும். மாமேதைகள் சிறுவர்களிலிருந்தே உருவானவர்கள் அல்லவா… படைப்பாற்றலின் உச்சம் கண்டவர்கள் ஒரு வகையில் தங்களுக்குள் உயிர்த்திருக்கும் குழந்தைமையை தொலைத்திராதவர்கள்தானே! அதனாலேயே அவர்களது பார்வை சாமானியர்களைக் காட்டிலும் துல்லியமானதாகவும், சில சமயங்களில் மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டு விடுமளவுக்கு ஆழமானதாகவும் இருக்கினறது.
மன்சர், சுரின்சர் ஏரிகளைச் சென்றடைந்தபோது நேரம் முற்பகலைத் தாண்டியிருந்தது. அங்கு பொழுதுபோக்குக்காகச் செயற்கையாக எந்தவொரு விஷயமும் இருக்கவில்லை என்பது குழந்தைகளுக்கு ஏமாற்றமாகிவிட்டது. “இங்குதானா எங்களை அழைத்து வர வேண்டும்?’’ என்பதுபோல் சிலர் ஏக்கத்துடன் பார்த்தனர். “உங்கள் முன் இயற்கை கொட்டிக்கிடக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும்?’’ என்றேன். சிறிது நேரத்திலெல்லாம் சிறுவர்கள் தத்தமது கறபனை விளையாட்டுகளைத் தொடங்கினர். சிலர் பட்டாம்பூச்சிகள் பிடிக்க ஓடினர். வேறு சிலர் ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடித் திளைத்தனர். மேலும் சிலர் கற்பனையாக நாடகங்கள் இயக்கி நடித்தனர். அதில் அவர்களே குரங்குகளாகவும், சிங்கங்களாகவும் மாறினர். அவர்களுடன் இணைந்து விளையாடியதில் நேரம் போனதே தெரியவில்லை எனக்கு.
உணவு இடைவேளைக்காக அனைவரும் ஒரு மரத்தடியில் கூடினோம். அப்போது எங்கிருந்தோ இரண்டு மனிதர்கள் எங்களை நோக்கி வந்தனர். வனத்துறை அதிகாரிகள் என்று அவர்களது சீருடைகள் உணர்த்தின. `யாரும் ஏரியினருகே சென்று விளையாடவோ, ஏரியை அசுத்தபடுத்தவோ, உணவுத்துணுக்குகளை ஏரியில் போடவோ கூடாது’ என எச்சரித்துச் சென்றனர். மதிய உணவுக்குப் பிறகு சிறுவர்கள் மீண்டும் உற்சாகமாக விளையாட்டைத் தொடர்நதனர்.
நஃபீஸ் ஏரிக்கரையில் அமர்ந்துகொண்டான். ஏரியின் நிச்சலனத்தைத் தனது பார்வையால் அளந்துகொண்டிருந்தான். நான் அவனருகே சென்றமர்ந்தேன்.
நீர்நிலையைக் கண்களால் குடித்துக்கொண்டே மீண்டும் ஆணித்தரமாக “இது போர்க்களம்’’ என்றான். நீரில் சிறு சலனம்கூட இல்லை. “அமைதியின் சொரூபமாக தெய்விகத்தின் அடையாளமாக இருக்கும் இந்த நீர்நிலை உனக்கு போர்க்களமாக தெரிகிறதா? உன் கற்பனைகள் எல்லை மீறுகின்றன நஃபீஸ்’’ என்று அவனைச் செல்லமாகக் கடிந்துகொண்டு அவ்விடம் விட்டெழுந்தேன். மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தினேன். மாலை வேளை நெருங்கியது. அனைவரையும் புறப்படச் சொல்லி ஆயத்தப்படுத்தினேன். நஃபீஸ் ஏரிக்கரையிலேயே அமர்ந்திருந்தான். அவனையும் புறப்படச் சொல்லி கட்டளையிட்டேன். எனது கட்டளைகளுக்கு உடனே செவிசாய்ப்பான் நஃபீஸ். மற்ற நேரங்களில் எப்படியோ, ஆனால் எனது குரலின் அதிகாரத்தொனி தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறுவான். “நீங்க சொன்னா கேட்டுக்கணும்போலிருக்கு ஷாலு’’ என்பான் குழந்தையாக.
சிறுவர்களை எண்ணிக்கைப்படி வரிசையாக நிற்கச் செய்து அவர்களது உடைமைகளைச் சரிபார்த்து ஒவ்வொருவராக வண்டியில் ஏற்றினேன். திடீரென்று வரிசையிலிருந்து விலகினான் நஃபீஸ். தனது உணவுப் பொட்டலத்திலிருந்த ரொட்டித் துண்டங்களை எடுத்துக்கொண்டு வேகமாக ஏரியை நோக்கி ஓடியவன், அவற்றை ஏரியில் வெகுதூரம் வரை வீசியெறிந்தான். ஏரியில் முதலில் வட்ட வடிவ அலைகள் எழும்பின.
பின்னர் ஏரி முழுதும் கலங்கியது. கரையை நோக்கி ஆயிரக்கணக்கான மீன்கள் படையெடுத்தன. நஃபீஸ் தொடர்ந்து ரொட்டித் துண்டங்களை வீசியபடி இருந்தான். நானும் மற்ற சிறுவர்களும் அவனை நோக்கி ஓடினோம். அவன் நீரில் பாதம் புதைத்து நின்றிருந்தான்.
அதோடு மட்டுமல்லாமல் பற்பல சின்னஞ்சிறிய நண்டுகளும், சிற்றாமைகளும் கரையை நோக்கி வரத் தொடங்கின. அனைத்துமே வாய் திறந்து அவன் காலருகே வேகமாகப் படையெடுத்தன. அவன் முன்னிலும் வேகமாக ரொட்டித் துண்டங்களைப் பிய்த்து அவற்றுக்கு வீசினான். அவை முன்பைவிட வேகமாக தண்ணீரை அடித்துக்கொண்டும், மற்ற உயிரினங்களை தாக்கியபடியும் அத்துண்டங்களைப் பெறப் போராடின. ஏரி நீரின் சலசலப்பு மரங்களில் ஓய்வெடுத்திருந்த பறவைகளை எழுப்பியது. நீள மூக்குப் பறவைகளும், கிங்ஃபிஷர் போன்ற பல வண்ணப் பறவைகளும் ஏரியை நோக்கித் தாழப் பறந்துவந்து மீன்களைக் கொத்திச் சென்றன. அதுவரை சூழலில் நிலவிய அமைதி முற்றிலும் மாறிப்போனது.
எனக்கு அப்போது நஃபீஸைப் பார்க்க பயமாக இருந்தது.
சில நிமிடங்களிலெல்லாம் வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்துவிட்டனர். சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காகவ என்னிடம் கடுமையாக கோபித்துக்கொண்டனர். நஃபீஸ் குறும்புத்தனமான புன்னகையுடன் வரிசையில் அமைதியாக நின்றுகொண்டான். சுற்றுச்சூழலின் அமைதியைக் குலைத்ததற்காக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். மற்ற சிறுவர்கள், நஃபீஸ்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று அவனைப் பகடி செய்தனர். எனக்கு அவனது உண்மை நிரம்பிய புன்னகை மட்டுமே நினைவில் நின்றது. அவனுக்கு வாழ்க்கை விரைவாக விளங்கிக்கொண்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
சில மாதங்கள் கழிந்தன. நஃபீஸ் என் வீட்டின் ஓர் அங்கமாகியிருந்தான். ஹாசிம் அவனைத் துன்புறுத்தும்போதெல்லாம் அவனுக்கு அன்பின் புகலிடமாக என் வீடு இருந்தது. மழைகாலம் தொடங்குவதன் சமிஞையாகப் புயல்காற்று சுழன்றடித்த ஓர் இரவு வேளையில் என் வீட்டினுள் ஒரு பாம்பு நுழைந்தது. அந்நேரம் நஃபீஸ் என்னுடன் இருந்தான். வீடெங்கும் அலைக்கழித்து ஓடிய நாகத்தை எப்படித் துரத்துவது என்று புரியாமல் இருவரும் திணறினோம். அது வீடு முழுதும் ஓடி ஒளிந்து, படமெடுத்துச் சீறி விளையாடிக்கொண்டிருந்தது. கைக்குழந்தையுடன் தவித்த என்னை நஃபீஸ் ஆற்றுப்படுத்தினான். “நீங்கள் சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வாருங்கள். அதுவரை நான் அது தப்பிச் செல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றான். “நீயும் சிறுவனாயிற்றே… உன்னை எப்படித் தனியே விட்டுச்செல்வேன்?’’ என்று பதறினேன். அவன் தீர்க்கமாக என்னைப் பார்த்து “நீங்க போங்க… நான் பார்த்துக்குறேன்” என்றான்.
நான் அக்கம் பக்கத்தினரைத் திரட்டிக்கொண்டு வந்தேன் அதிலொருவர் பாம்பு பிடிக்கும் வித்தையறிந்தவர். அவர் ஒரு பெரிய சாக்குப்பையை எடுத்து வந்தார். “ஆனால் இந்நேரம் பாம்பு அங்கு இருக்க வேண்டுமே… அது எப்பவோ ஓடியிருக்கும்’’ என்றார் அவர். `வீட்டுக்குள் எங்காவது சென்று அது ஒளிந்துகொண்டால் அங்கு வசிப்பதே பெரும்பாடாகிவிடுமே…’ என்று பல்வேறு குழப்பமான எண்ணங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த நானும் மற்றவர்களும் ஒரு நொடி பேச்சு மூச்சின்றி நின்றோம். அங்கு பாம்பு சுருண்டு படுத்திருந்தது. அதன் முன் நஃபீஸ் அசையாமல் அமர்ந்திருந்தான். அவனது மூச்சுக்காற்றுக்கூட வெளியே கேட்கவில்லை. அவனது உடல் முழுதும் வியர்த்திருந்தது. ஆனாலும் அவன் அசையவில்லை. நாகமும் தலை கவிழ்ந்து சுருண்டிருந்தது. பாம்பு பிடிப்பதாகக் கூறிய நபர் கவனமாக முன்னேறிச் சென்று பாம்பின் கழுத்தை இறுகப் பற்றி அதை உடனே சாக்கினுள் அடைத்து வெளியே கொண்டு சென்றுவிட்டார். நினைவு திரும்பியவன்போல் நஃபீஸ் சட்டென்று சிரித்தான்.
அனைவரும் சிரித்தனர். நான் அவனது கண்களை மட்டும் பார்த்தபடி நின்றேன்.
அவ்வாண்டின் கோடை விடுமுறை முடிந்து நான் ஊர் திரும்பச் சிறிது தாமதமாயிற்று. நாங்கள் திரும்பியதும் அங்கு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை உணர முடிந்தது. அதில் முக்கியமான மாற்றம், நான் வீடடைந்து நான்கு நாடள்களாகியும் நஃபீஸ் என்னைக் காண வராததுதான். நான் அவனைப் பற்றி விசாரித்தபோதெல்லாம், அவன் புதிதாக வந்திருக்கும் அதிகாரியின் அறையைச் சுத்தம் செய்து, அவருக்குப் பணிவிடைகள் செய்ய அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக ஹாசிம் கூறுவார். அதிகாரியின் கருணை கிடைத்ததில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நஃபீஸ் என் பார்வையிலிருந்து மறைந்தான். எப்போதாவது அவனைச் சந்திக்க நேர்ந்தாலும் அவன் என்னிடம் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டான். அவனது புன்னகையோ நிரந்தரமாக மறைந்துபோனது.
பின்னொரு நாள் அலுவலகத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது அவனைப் பார்த்தேன். அனைவருக்கும் பழரசம் விநியோகித்துக்கொண்டிருந்தான். என்னிடம் வந்தபோது ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து சென்றான். “நஃபீஸ் புது நண்பர் கிடைத்ததும் என்னை மறந்துவிட்டாயல்லவா?’’ என்றேன். அவன் சட்டென்று நின்று என்னைத் திரும்பிப் பார்த்தான்.
அன்று நான் கண்ட அவனது முகம் என்னைச் சில நாள்களுக்கு உறங்கவிடாமல் செய்தன.
ஒருநாள், இரவு நேரம் அவன் அதிகாரியின் வீட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தான். பயமே அறியாத அந்த அற்புதச் சிறுவன் ஓட்டமும் நடையுமாக வேகமாக வந்துகொண்டிருந்தான். அவனைப் பெயர் சொல்லி அழைத்தேன். அவன் நிற்காமல் முன்னேறினான். “நில்லுடா, எங்கே வேகமா ஓடுறே?’’ என்று அவனது உள்ளங்கையைப் பற்றி இழுத்தேன். அது வியர்வையில் நனைந்து பிசுபிசுத்திருந்தது. அதையும் மீறிய ஒரு துர்நாற்றம் அதில் வீசியது. அவன் வெடுக்கென்று கைகளை எடுத்தான். கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது அவனுக்கு.
நாட்கள் வாரங்களாகின. `நஃபீஸ் இனி வர வேண்டாம்’ என்று அதிகாரி கூறிவிட்டதாக ஹாசிம் என்னிடம் கூறியபோது அவரது கண்களில் கோபம் கொப்பளித்தது. நான் வெற்றிப் புன்னகையொன்றை அவருக்குப் பரிசளித்தேன். அன்று மாலை நஃபீஸ் என்னை விளையாட்டுப் பூங்காவில் சந்தித்தான்.
“உங்கள எங்கப்பா ரொம்பத் திட்டுறாரு. உங்களாலதான் அந்த அங்கிள் என்னையக் கூப்பிடுறதை நிறுத்திட்டாராம். எனக்கு வேலை வாங்கித் தர்றதாச் சொன்னாராம். ஆனா இப்ப உங்களால எல்லாம் பாழாகிருச்சுன்னு அப்பா உங்களை அசிங்கமா திட்டுறாரு’’ என்றான். “அதை விடுடா, இப்போ நீ சந்தோஷமா இருக்கியா… அந்தாளு உன்னையக் கூப்பிடுறதில்லையே?’’
“இல்லக்கா… வர வேணாம்னு சொல்லிட்டாரு. நீங்க என்ன செஞ்சீங்க… அவர் ஏன் வரவேணாம்னு சொல்லிட்டாரு?’’
“அதுவா, அன்னைக்கு நீ அந்தப் பாம்புக்கும் எனக்கும் நடுவுல எப்படி கல்லு மாதிரி நின்னுட்டிருந்தியோ அதே மாதிரி அவருக்கும் உனக்கும் நடுவுல நான் நின்னுட்டேன். அவ்வளவுதான்’’ என்றேன். நஃபீஸ் அப்போது முதன்முறையாக என்னருகே வந்தான். அதுவரை அவன் அப்படிச் செய்ததில்லை. அவன் என் தோள்களில் சாய்ந்துகொண்டான். நான் அவன் தோள்களுக்காகக் காத்திருந்தேன். இப்போதும் காத்திருக்கிறேன். என் கணிப்பு சரியென்றால் அவனுக்கு இப்போது இருபத்தி நான்கு வயதாகியிருக்கும்!
அற்புதங்கள் நிறைந்த பயணங்கள் தொடரும்…