ஒற்றுமைக்கு முயற்சி
‘சேடக்’ ஹெலிகாப்டர் அறிமுகப்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, இந்திய விமானப்படை சார்பில், ஐதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
நாட்டுக்காக பாடுபட்டவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உண்மையான அஞ்சலி செலுத்துவதாக அமையும். நாட்டின் பாதுகாப்புக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். அதன் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளும்.
போர்
ஒரு நாடு தனது பாதுகாப்புக்காக போரிடும்போது, அதன் ராணுவம் மட்டும் அதில் ஈடுபடுவது இல்லை. ஒட்டுமொத்த நாடும் பங்கேற்கிறது. விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ‘சேடக்’ ஹெலிகாப்டரை தயாரிக்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுக்கு சமமாக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதுபோல், உதிரிபாகங்களை வழங்கி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் போரில் பங்காற்றுகின்றன.
‘சேடக்’ ஹெலிகாப்டர் என்பது வெறும் எந்திரம் அல்ல. நாட்டின் பாதுகாப்புக்காக 60 ஆண்டுகளாக பாடுபட்டு வரும் ஒரு அடையாளம். இதுவரை 700 சேடக் ஹெலிகாப்டர்கள், தேசத்துக்காக பணியாற்றி உள்ளன. 1971-ம் ஆண்டு போரில், அவற்றின் பங்கு பாராட்டுக்குரியது. இது 5 டன் பிரிவை சேர்ந்த இலகுரக ராணுவ ஹெலிகாப்டர் ஆகும். 10 டன் எடை கொண்ட ஹெலிகாப்டர் தயாரிப்பிலும் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.
உள்நாட்டு உற்பத்தி
முன்பெல்லாம், பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. தற்போது, பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாதுகாப்பு தளவாடங்களுக்கு யாரையும் சார்ந்திருக்காமல், தற்சார்பு நிலையுடன் இருக்கிறோம்.
இந்தியாவில் 2 ஆயிரம் ராணுவ, சிவில் ஹெலிகாப்டர்களுக்கு தேவை இருக்கிறது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.