பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்காவின் அடிமை- இம்ரான்கான் அதிரடி குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்:
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு மக்கள் மத்தியில் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். 
அதில் அவர், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் மீது பல்வேறு புகார்களை சுமத்தி உள்ளார்.
ஷாபாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ,  மௌலானா பஸ்லுர் ரஹ்மான் ஆகியோர் அமெரிக்காவின் அடிமைகள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 
மூன்று கைக்கூலிகளும் மாறி மாறி 30 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து, எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதாகவும், இப்போது அவர்கள், பாகிஸ்தானியர்களை அமெரிக்காவின் அடிமைகளாக இருக்க சொல்கிறார்கள் என்றும் இம்ரான்கான் குறிப்பிட்டார். 
தம்மை பதவியில் இருந்து நீக்க ஒரு வெளிநாட்டு சக்தி முயற்சிப்பதாகவும், இம்ரான் கான் நீக்கப்பட்டவுடன், ​​ஷாபாஸ் ஷெரீப் வருவார் என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளுக்கு அந்த நாடு தகவல் அனுப்பி உள்ளதாகவும் 
அவர் குறிப்பிட்டார். 
தம்மை நீக்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் முன்பே சதி செய்தார்கள் என்றும்  ஷாபாஸ் ஷெரீப் மீது மில்லியன் கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் இம்ரான்கான் குற்றம் சாட்டினார். 
தனக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பாகிஸ்தான் இளைஞர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்றும் இம்ரான்கான் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இம்ரான்கான் மீது பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
இது குறித்து பேசிய இம்ரான்கான், தமது கட்சித் தொண்டர்கள் கவலைப் படவேண்டாம் என்றும்,  கேப்டனுக்கு எப்பவுமே ஒரு திட்டம் இருக்கும், இந்த முறை என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். கடவுள் உதவியுடன் நாம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.