இஸ்லாமாபாத் : “நான் ரஷ்யாவுக்கு சென்றதால், பாகிஸ்தான் மீது அமெரிக்கா கோபத்தில் உள்ளது,” என, பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் – இ — இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் கடந்த 28-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நாளை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.இந்த பரபரப்பான சூழலில், சர்வதேச பாதுகாப்பு தொடர்பாக, நேற்று நடந்த மாநாட்டில், பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: நம் நாட்டிற்கு, சுதந்திரமான வெளியுறவு கொள்கை இருக்க வேண்டியது முக்கியம். நாட்டின் நலனை கருத்தில் வைத்து சுதந்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து, வெளிநாடுகள் செய்யும் உதவிகளை வைத்து, அவர்களுக்கு நாம் அடிப்பணியக்கூடாது.
பிப்ரவரியில், நான் ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசினேன். இதை விரும்பாத அமெரிக்கா, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாக்., மீது கோபத்தில் உள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவை, அமெரிக்கா ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பிரதமர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு இம்ரானை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இதுகுறித்து, பாக்., மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ நேற்று கூறுகையில், “இம்ரானுக்கு இப்போது வேறு வழியே இல்லை.ராஜினாமா செய்வது மட்டுமே, அவருக்கு கவுரமான வழியாக இருக்கும். அதை அவர் செய்தாக வேண்டும்,” என்றார்.
பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் துணை தலைவர் மரியம் நவாஸ் கூறுகையில், “பிரதமர் பதவியில் அமரும் தகுதி தனக்கு இல்லை என்பதை, இம்ரான் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். மக்கள் முன்பு அழுவதை விடுத்து, அவர் தைரியமாக ராஜினாமா செய்ய வேண்டும்,” என்றார்.
சிறந்த நாடாக இருந்தது!
‘இம்ரான் கான் பிரதமர் பதவியில் இல்லாதபோது, பாக்., சிறந்த நாடாக இருந்தது. இம்ரான் கானால் உருவாக்கப்பட்டுள்ள குழப்பங்களை சரி செய்ய, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் தெரிவித்துள்ளார்.