25 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆணவத்துடன் உள்ளது, அவர்கள் மக்கள் சொல்வதைக் கேட்பதில்லை. எனவே குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
பஞ்சாப் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிக்குப் பிறகு உற்சாகத்தில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊரான குஜராத்தில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது, இந்த ஆண்டு டிசம்பர் குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த சூழலில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், “குஜராத்தில் 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. நான் எந்தக் கட்சியையும் விமர்சிக்க வரவில்லை. பாஜகவை தோற்கடிக்க வரவில்லை. காங்கிரசை தோற்கடிக்க வரவில்லை. குஜராத்தை வெற்றிபெற வைக்க வந்துள்ளேன். குஜராத்தையும், குஜராத்திகளையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். குஜராத்தில் ஊழல் முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.
மேலும், “25 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆணவத்துடன் உள்ளது, அவர்கள் மக்கள் சொல்வதைக் கேட்பதில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், பஞ்சாப் மக்கள் செய்தது போல், டெல்லி மக்கள் செய்தது போல குஜராத்திலும் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்களை பிடிக்கவில்லை என்றால், அடுத்த முறை எங்களை மாற்றுங்கள்” என்றார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகியவற்றை வென்றுள்ளோம் ,இப்போது குஜராத்திற்கும் தயாராகி வருகிறோம்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM