மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராவைச் சேர்ந்தவர் பிவா தர்மசஹரா(65). இவர் தனது தோட்டத்தில் வேலை செய்த சற்று மனநிலை பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். 2008-ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த அந்தப் பெண், அதே ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தை பெற்றெடுத்தார். இது தொடர்பான புகாரில் பிவா கைது செய்யப்பட்டார்.
குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தைக்கு பிவாதான் தந்தை என்று தெரியவந்தது. வழக்கு விசாரணையின்போது பிவா தனது சொத்துகள் அனைத்தையும் தனது வாரிசுகளுக்கு எழுதி வைத்தார். அதோடு விசாரணையின்போதே இறந்தும் போனார். ஆனாலும், இது தொடர்பான வழக்கை விசாரித்த பண்டாரா மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியின் வாரிசுகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.8 லட்சம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டது.
மற்றுமொரு சம்பவம்:-
மும்பை தாராவியில் வசிப்பவர் இப்ராகிம் ஷேக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இப்ராகிம் ஷேக்குடன் அவரது சகோதரரும் வசித்து வருகிறார். இப்ராகிம் ஷேக்கிற்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இப்ராகிம் ஷேக்கின் 14 வயது மகள், தன் தந்தை, சித்தப்பா மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்தார். தாராவி ஷாகு நகர் போலீஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தன் மகளோடு சென்று, தான் வீட்டில் இல்லாதபோது தன்னுடைய கணவர் மற்றும் அவர் சகோதரர் ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் செய்தார்.
இதையடுத்து இப்ராகிம் மற்றும் அவர் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருக்கின்றனர். இருவரும் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது, புகார் கொடுத்த தினத்தன்று இப்ராகிம் தன் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்திருக்கிறார் என்று தெரியவந்தது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரிக்கப்பட்டதில் பெண்ணின் தாயார் சொல்லிக்கொடுத்துதான் தந்தை, சித்தப்பா ஆகியோர் மீது பாலியல் புகார் கூறியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி பிரீத்தி குமார், “சிறையில் இருக்கும் இரண்டு பேரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும், நீதிபதி தனது தீர்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயாரின் தூண்டுதலில் இருவர் மீதும் பாலியல் புகார் செய்துள்ளார். விசாரணையின்போது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடக்கும் என்று தெளிவாக தெரிகிறது. ஆனால் மைனர் பெண்ணிடம் விசாரித்த போது தங்கள் பெற்றோர் சண்டையே போட்டுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்தே அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை நம்பகத்தன்மையுள்ளதாக கருத முடியவில்லை. அதோடு மருத்துவப் பரிசோதனையிலும் மைனர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த வித அறிகுறியும் இல்லை” என்று தெரிவித்தார்.