புதுச்சேரியில் மின் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை: பாஜக

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை எனவும், அரசியல் செய்ய எதுவும் இல்லததால் அரசின் மீது நாராயணசாமி பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார் எனவும் அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் இன்று (ஏப். 2) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”வருகின்ற 6-ம் தேதி பாஜகவின் தொடக்கம் மற்றும் சாதனை நாள். அன்றைய தினம் பாஜக சார்பில் நாடுமுழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்களுடன் பேசவுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பாஜக நிர்வாகிகள் பிரதமரின் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அன்றைய தினம் மிகப்பெரிய பேரணியை நடத்தவுள்ளோம். தொடர்ந்து 17-ம் வரை மருத்துவ முகாம், குளங்கள், ஏரிகள் தூர்வாரும் பணி, சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவது, துப்புரவு தொழிலாளர்களை கவுரவிப்பது போன்றவை நடத்த உள்ளோம்.

நாடு முழுவதும் முதல் முறையாக ஏப்ரல் 16-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி பாஜக கொண்டாடுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் அம்பேத்கர் படத்தை வைத்துக் கொண்டாட உள்ளோம். அம்பேத்கர் சிலைகளை சுத்தப்படுத்தி மரியாதை செலுத்த இருக்கிறோம். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்ச்சிகளில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த மாதம் முழுவதும் சேவா வாரமாக கடைபிடிக்க உள்ளோம்.

புதுச்சேரியில் பிரதமர் திட்டத்தில் பயனடைந்தவர்களை நேரடியாக சந்தித்து கவுரப்படுத்தும் நிகழ்ச்சியும் நடத்தவுள்ளோம். பிரமரின் திட்டங்கள் இன்னும் சென்றடையாதவைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல குழுக்களை அமைத்துள்ளோம். புதுச்சேரியில் எதிர்காலத்தில் பாஜக வலுவாகன கட்சியாக உருவெடுப்பதற்கு பல்வேறு வகைகளில் கட்சி நிர்வாகிகள் களப்பணிகளை ஆற்றி வருகின்றனர். கரோனா சமையத்தில் வழங்கிய இலவச அரிசி திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்திருப்பதற்கு புதுச்சேரி பாஜக சார்பில் பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து கருத்துக்களை கேட்டு மின் உயர்த்தப்படுகிறது. இன்று மின்துறையை சீரமைக்கவும், நவீனப்படுத்தவும் வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் நேரடியாக தலையிடவில்லை. மின்துறைக்கு என்று தனியாக குழு அமைத்து கருத்துக்களை கேட்டு, செயல்படுத்துகின்றனர். புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரையில் பெரிய அளவில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 30, 40 காசுகள் தான் ஏற்றியுள்ளனர். இதையும், பொதுமக்கள் பாதிக்காத வகையில் பாஜக சார்பில் சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடம் முறையிடுவோம். மின்கட்டணம் உயர்வு குறித்து பரிசீலிக்கவும் வலியுறுத்துவோம்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக சொல்லியிருப்பது எந்த வகையில் உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. இது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு. இதனை கவிழ்க்க வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்ய எதுவுமே இல்லாததால் அரசின் மீது நாராயணசாமி பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்” என்று சாமிநாதன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.