புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 2022 – 23ம் ஆண்டுக்கான உதேச மின்கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து உதேச கட்டணம், நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவித்து இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 100 யூனிட்டுகள் வரை ரூ.1.55 காசுகளாக இருந்ததில், 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 101 யூனிட்டுகளில் இருந்து 200 யூனிட்டுகள் வரை ரூ.2.60ல் இருந்து 15 பைசா உயர்ந்து ரூ.2.75ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 201 யூனிட்டுகளுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதேபோன்று வர்த்தக, விவசாயி மின்கட்டணங்களிலும் மாற்றம் இல்லை.