புதுடெல்லி:
கொரோனாவை தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி என்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் பொது மக்களிடம் அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தி விட்டனர்.
ஊசி போட்டுக் கொள்ளாதவர்களை ஊசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் செய்து வருகின்றன.
இதற்கிடையில் உருமாற்ற வைரஸ் தாக்கம் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. அந்த உருமாற்ற வைரசை எதிர்க்கும் ஆற்றல் பூஸ்டர் தடுப்பூசிக்கு மட்டுமே இருப்பதாகவும் ஏற்கனவே செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் ஆற்றல் 6 முதல் 8 மாதங்கள் வரைதான் உடலில் இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் தடுப்பூசியின் வீரியம் உடலில் 6 முதல் 8 மாதங்கள் வரை தான் இருக்கும் என்பதையே தெரிவிப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் மெஹ்ரா கூறி இருக்கிறார்.
இந்த ஆய்வுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுள்ளதாக டாக்டர் சரீம் கூறி உள்ளார்.
இந்தியாவை பொறுத்த வரை தடுப்பூசி போட்டவர்களிலும் 30 சதவீதம் பேர் அவர்கள் நினைப்பது போல் முழு பாதுகாப்பாக கருத முடியாது.
4-வது அலை நாட்டை தாக்கினால் அத்தகையவர்கள் கடுமையான தொற்று நோயை எதிர்கொள்ள நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே 6 மாதங்கள் அல்லது அதற்கு முன் 2-வது டோஸ் பெற்ற எவருக்கும், வயதைப் பொருட்படுத்தாமல், குறிப்பாக அந்த நபருக்கு இணை நோய்கள் இருந்தால் 3-வது டோஸ் அல்லது பூஸ்டர் டோசை அனுமதிக்கும் தெளிவான கொள்கையை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
தற்போது இந்தியாவில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4-வது டோஸ் போடப்படுகிறது.
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் முதன்மை தடுப்பூசி தொடரை முடித்த 5 மாதங்களுக்கு பிறகு 3-வது டோஸ் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 2 வகைகளை கொண்டுள்ளது. ஆன்டிபாடிகள் மற்றும் செல்-மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியின் உற்பத்தியால் வெளிப்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு சக்தி. கொரோனா போன்ற வைரஸ் தொற்றில், நோய் எதிர்ப்பு சக்தியின் இருகரங்களும் கடுமையான நோயைத் தடுப்பதில் செயலில் பங்கு வகிக்கின்றன.
மேலும் ஒரு அலை வந்தால் அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று “பூஸ்டர் டோஸ்களை முடிவு செய்ய காத்திருக்க முடியாது. 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பு 2-வது டோஸ் எடுத்த எவருக்கும் செயல்முறையை இப்போது தொடங்க வேண்டும். மேலும் சிறந்த செயல் திறனுக்காக தடுப்பூசிகளை கலக்கும் யோசனையையும் நாம் ஆராய வேண்டும் என்றனர்.
உஜாலா சிக்னஸ் மருத்துவமனையின் நிறுவனர் இயக்குனர் டாக்டர் சுச்சின் பஜாஜ், அனைத்து வயதினருக்கும் பூஸ்டர்களை அரசாங்கம் விரைவில் அனுமதிக்க வேண்டும். சீனா மற்றும் ஹாங்காங்கில் அலைகள் அதிகமாக காணப்படுவதைக் கருத்தில் கொண்டு, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.